சட்டம் படிக்கும் மாணவர்கள் சமூக அக்கறையையும், சமத்துவத்தையும் பின்பற்ற வேண்டும்- நீதியரசர் நக்கீரன் பேச்சு!
Students studying law must follow social responsibility and equality -Justice Nakkeerans speech
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லுரியில் முதலாம் ஆண்டு இளங்கலை சட்டப்படிப்புக்கான அறிமுக வகுப்புகள் துவக்க விழா 10/8/2025 அன்று நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் திரு.சரவணன் தனபாலன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் மாண்பமை நீதியரசர் திரு A.A. நக்கீரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான திரு.K.பாலு அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவின் தலைமையுரையை ஆற்றிய கல்லூரியின் தலைவர் திரு. சரவணன் தனபாலன் அவர்கள், சட்டம் படிக்கும் மாணவர்கள் எப்போதும் சமூகநீதி, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகிய உணர்வுகள் கொண்டவர்களாக இருக்க வேண்டும், படிக்கும்போதும், நல்ல வழக்கறிஞர்களாக திகழும் போதும் நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளும் கடமை, அதற்குரிய முறையான சீருடை, தோற்றம், தகவல் சேகரிப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்த வேண்டும், தங்களின் சமூகம், தங்களின் பெற்றோர், தாங்கள் படிக்கும் கல்லூரி ஆகியவற்றின் புகழுக்கும் பெருமைக்கும் எப்போதும் களங்கம் ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களை படிக்க வேண்டும் அவ்வாறு படிப்பதன் மூலமாக அன்றாட நிகழ்வுகள் பற்றிய அறிவும் இந்த சமூகத்தைப் பற்றிய புரிந்துணர்வும் அவர்களுக்கு ஏற்படும் இந்த சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக வாழ வேண்டும் என்ற உணர்வும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் கூறி வாழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கவுரையாற்றிய சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் மாண்பமை நீதிபதி திரு.A.A. நக்கீரன் அவர்கள் தனது உரையில், மாணவர்கள் நீதிபதிகளாகவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகவும் மாறுகின்ற ஆசைகளோடு சேர்த்து நல்ல அரசியல்வாதிகளாகவும் மாறுவதற்கான தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே நீதித்துறையின் கீழ்நிலை பணியாளர்களில் அதிக பெண்கள் பணி புரிவது தமிழ்நாட்டில் தான் என்ற கருத்தினைக் கூறி தமிழகம் பெண் உரிமையிலும் பெண் கல்வியிலும் சிறந்து விளங்குவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் கூறியபடி ஆண், பெண் சமத்துவமும் சமூக நீதியும், சமூக சமத்துவமும் ஏற்படுவதற்கு, சட்டம் படிக்கும் மாணவர்கள் தங்கள் குறிக்கோளை வகுத்துக் கொள்ள வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் சிலகடமைகள் இருக்கின்றன என்றும் அதிலும் முக்கியமான கடமை சட்டம் படித்த மாணவர்களுக்கு அதிகம் இருக்கிறது என்றும் கூறினார்.
இவ்விழாவின் சிறப்புரையை ஆற்றிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான திரு. K பாலு அவர்கள், மாணவர்கள் நல்ல நோக்கங்களையும், நல்ல பழக்க வழக்கங்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் மதித்து நடக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், மாணவர்கள் வாழ்க்கையில் உயர்வதற்கு கால மேலாண்மை என்பது மிகவும் முக்கியம் என்று கூறி அதற்குரிய நூல்களை படித்து தங்களின் காலத்தை வகுத்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று கூறினார். மேலும் ஒவ்வொரு மாணவரும் டைரி எழுதும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, எந்த ஒரு செய்தியையும் படித்ததும், கேட்டதும் அதை குறிப்பாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தால் தான் வேகமான வளர்ச்சி கிடைக்கும் என்று கூறினார். மேலும், கிருஷ்ணசாமி அய்யர் என்பவர் எழுதிய "தொழில் சார் நடத்தையும் வழக்குரைத்தலும்” என்ற புத்தகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி அந்த புத்தகத்தினை வாழ்க்கையின் வழிகாட்டியாக வைத்து வழக்கறிஞர் தொழிலில் உயர்ந்து விளங்க வேண்டும். சட்டம் படிக்கும் மாணவர்களுக்கு எப்பொழுதும் சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக இவ்விழாவின் வரவேற்புரையை கல்லூரியின் முதல்வர் பேராசிரியை பேகம் பாத்திமா அவர்களும், நன்றியுரையை உதவிப் பேராசிரியர் திரு.கர்ணன் அவர்களும் ஆற்றினர்.
English Summary
Students studying law must follow social responsibility and equality -Justice Nakkeerans speech