கோவில்பட்டியில் வினோத விபத்து: லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய பெயிண்ட்...! - ஓட்டுநர் படுகாயம்
Strange accident Kovilpatti Lorry overturns spilling paint road Driver seriously injured
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெயிண்ட் வாளிகளை ஏற்றிச்சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக் கம்பியில் மோதி கவிழ்ந்ததில், ஓட்டுநர் படுகாயமடைந்தார். லாரியில் இருந்த பெயிண்ட் சாலையில் கொட்டி பெருக்கெடுத்து ஓடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் இருந்து நாகர்கோவில் நோக்கி பெயிண்ட் வாளிகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த சக்திவேல் ஓட்டிச் சென்றார்.கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் பகுதியில் லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சாலையோர தடுப்புக் கம்பியில் பயங்கரமாக மோதிய லாரி, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.லாரி கவிழ்ந்த வேகத்தில் அதில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான பிளாஸ்டிக் வாளிகள் சாலையில் சிதறின. அவற்றில் இருந்த பெயிண்ட் கொட்டியதால் சாலையே பல வண்ணங்களில் மாறியதுடன், பெயிண்ட் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.விபத்தில் ஓட்டுநர் சக்திவேல் படுகாயமடைந்து சாலையில் தவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே சாலையில் சிதறிக்கிடந்த பெயிண்ட் வாளிகள் மற்றும் பெயிண்ட் கழிவுகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், லாரி கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Strange accident Kovilpatti Lorry overturns spilling paint road Driver seriously injured