துர்நாற்றம் வீசிய நடைபாதை: சுகாதாரமற்ற முறையில் இயங்கிய நாகர்கோவில் உணவகத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை அதிரடி ரெய்டு...!
Stinky sidewalk Food Safety Department raids Nagercoil restaurant operating unhygienic conditions
நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்த உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் நோட்டீசும் வழங்கினர்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அந்த உணவகத்தில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.

மேலும், உணவக சமையலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக அகற்றப்படாமல், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் வழிந்தோடுவதாகவும் புகார் எழுந்தது.கழிவுநீர் நடைபாதையில் தேங்கியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையும் உருவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் புகார்களின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தினர்.ஆய்வின்போது உணவு தயாரிக்கப்படும் முறை, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், உணவகத்தின் தூய்மை மற்றும் கழிவுநீர் வெளியேற்றப்படும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாதது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, விதிமுறைகளை மீறி செயல்பட்ட உணவகத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக உணவக நிர்வாகத்துக்கு அதிகாரிகள் நோட்டீசும் வழங்கினர்.
மேலும், ஆய்வின்போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரிசெய்து, உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் சுகாதார விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று உணவக நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.குறிப்பிட்ட குறைபாடுகளை சரிசெய்வதற்காக உணவக நிர்வாகத்துக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Stinky sidewalk Food Safety Department raids Nagercoil restaurant operating unhygienic conditions