அநீதியை கண்டு அமைதி காப்பது சமூக நீதியா..? மு.க ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்ட பரபரப்பு கடிதம்..!!
Sterlite Plant opponents Letter to CM MKStalin
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் 100வது நாளில் கலவரமாக வெடித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அப்பொழுது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போதைய அதிமுக ஆட்சியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.
அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழக அரசிடம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் சமர்ப்பித்தார். மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புடைய குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார்.

நீண்ட நாட்களாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில் "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே, தாங்கள் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணை அறிக்கை மீது கடந்த 18.10.2022ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிகழ்ந்த வாதத்தின் போது தாங்கள் துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளி கூண்டில் ஏற்றப்படுவார்கள் என்று உறுதி அளித்தீர்கள்.
அதற்கு முன் சட்டமன்றத் தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் துப்பாக்கி சூட்டை நடத்திய கொலையாளிகள் எவராக இருந்தாலும் அவர்களை தண்டிப்போம், குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்றுவோம் என்று உறுதியளித்தீர்கள்.

தங்களின் கீழ் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த, உறுப்புகளை இழந்த எங்களது தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உடனடியாக வேலை கொடுத்தீர்கள், நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரை ஏற்று கூடுதல் நஷ்ட ஈடு வழங்கினீர்கள். மேலும் காவல்துறையினரின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் உட்பட பல்வேறு துயிர் நீக்கும் பணிகளையும் செய்தீர்கள். அதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு எங்கள் தியாக உறவுகளின் இலட்சிய கனவான ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எமது மண்ணை விட்டு நிரந்தரமாக அகற்ற தாங்கள் உறுதி அளித்தபடி சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற நடவடிக்கை எடுங்கள்.

தூத்துக்குடி படுகொலைகள் நடைபெற்று ஆண்டுகள் 5 ஆகும் சூழலில் படுகொலைக்கு நீதியை மறுப்பது சமூக நீதியா? தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான கொலையாளிகள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என தாங்கள் கொடுத்த உறுதி மொழியை காற்றில் பறக்க விடுவது நியாயம் தானா? அநீதியை கண்டு அமைதி காப்பது சமூக நீதியா?
தங்கள் உறுதி அளித்தபடி இனியும் காலம் தாமதிக்காது நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களின் ஆணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள காவல் கொலையாளிகளை தூண்டில் ஏற்றுங்கள் உச்சபட்ச தண்டனை கிடைக்க ஆவணம் செய்யுங்கள். தூத்துக்குடியின் மையப்பகுதியில் சூழியல் காக்க மானுடம் காக்க படுகொலையுண்ட மனித குலத்தின் மகத்தான எமது 15 தியாக உறவுகளின் நினைவாக நினைவகம் அமைத்திடுங்கள். மே 22 சூழியல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக அறிவியுங்கள். அன்றைய நாளில் சூழியலுக்காக போராடும் போராளிகளுக்கு விருது வழங்கி கௌரவியுங்கள்" என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தினர் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
English Summary
Sterlite Plant opponents Letter to CM MKStalin