காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி விபத்து...! உயர் அழுத்த மின்கம்பியில் இரும்புக் கம்பி உரசி தொழிலாளி பலி...!
Shocking accident Kanchipuram Worker dies after being hit by iron wire high voltage power line
காஞ்சிபுரத்தில் கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பி, அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட மின்சார விபத்தில் வெல்டிங் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதில் அருகிலிருந்த மின்மாற்றியும் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் அருகே வேகமாக வளர்ந்து வரும் இந்திரா நகர், ஜி.எஸ்.ஆர். அவென்யூ பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. வீட்டின் இரண்டாவது மாடிக்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தன.

மாடியின் தடுப்புச் சுவர்களை அமைப்பதற்குத் தேவையான இரும்புக் கம்பிகளை கீழிருந்து மேலே எடுத்துச் செல்லும் பணியில் உக்கல் பகுதியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் சில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, நீளமான இரும்புக் கம்பியை மேல்நோக்கி தூக்கிச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அருகே சென்றுகொண்டிருந்த உயர் அழுத்த மின்கம்பியில் அந்த இரும்புக் கம்பி உரசியது.மின்கம்பியில் இரும்புக் கம்பி உரசிய அடுத்த நொடியே, அதில் பயங்கர வேகத்தில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கன்னியப்பன் மீது மின்சாரம் பாய்ந்து, அவர் தூக்கி வீசப்பட்டார்.மின்சார அதிர்ச்சியில் உடல் கருகிய நிலையில் கன்னியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த சக தொழிலாளர்கள் இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதற்கிடையே, மின்சாரம் தாக்கிய அதிர்வின் காரணமாக அருகில் இருந்த மின்மாற்றியிலும் திடீரென கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.மின்மாற்றி வெடித்த சத்தத்துடன் புகை மண்டலமும் ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் பதற்றமடைந்து சம்பவ இடத்தை நோக்கி ஓடி வந்தனர்.
அங்கு கன்னியப்பன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்ட விதம் குறித்தும், கட்டுமானப் பணியின்போது மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயர் அழுத்த மின்கம்பி அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த துயர சம்பவம் இந்திரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking accident Kanchipuram Worker dies after being hit by iron wire high voltage power line