திடீரென சீறும் கடல்... 2 நாட்களுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கையால் கடற்கரைகளில் கட்டுப்பாடுகள்...!
Suddenly sea roars Restrictions on beaches due to severe sea warning 2 days
தென் இந்திய கடலோரப் பகுதிகளில் திடீரென உருவாகும் சக்திவாய்ந்த நீண்ட அலைகளால் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் கள்ளக்கடல் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 13-ம் தேதி தென் இந்தியப் பெருங்கடலில், இந்திய கடற்கரையில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உருவான அதிக ஆற்றல் கொண்ட நீண்ட அலைகள் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்த அலைகளின் இடைவெளி சுமார் 21 வினாடிகள் என்பதால், அவை அதிக சக்தியுடன் கரையை நோக்கி வந்து தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென் இந்திய கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நீண்ட அலைகள் இன்று 19-ம் தேதி அதிகாலை முதல் இந்தியாவின் தென் முனையை தாக்கத் தொடங்கி, மாலை நேரத்தில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.
கேரளா, தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை 20-ம் தேதி மாலை 5.30 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் கடல் ஏற்றமும் அதிக அலைகளும் ஒரே நேரத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், தாழ்வான கடலோர பகுதிகளில் கடல் நீர் திடீரென ஊருக்குள் புகுந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் என்பது தொலைதூர கடல் பகுதியில் உருவாகும் சக்திவாய்ந்த நீண்ட அலைகள், எந்தவிதமான நேரடி புயல் தாக்கமும் இல்லாமல் திடீரென கடற்கரையை நோக்கி வந்து கரையை தாக்கும் நிகழ்வாகும்.பொதுவாக கடல் அலைகள் அருகிலுள்ள காற்றின் தாக்கத்தால் உருவாகும்.
ஆனால் கள்ளக்கடல் அலைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உருவாகி, கடும் புயல் அல்லது தாழழுத்தப் பகுதியின் தாக்கத்தால் தோன்றுகின்றன. பின்னர், காற்றின் வேகம் குறைந்தாலும் தங்களது ஆற்றலை இழக்காமல் பல நாட்கள் கடலில் பயணித்து இந்திய கடற்கரையை வந்தடைகின்றன.
இந்த அலைகளுக்கு இடையிலான கால இடைவெளி பொதுவாக 18 முதல் 22 வினாடிகள் வரை இருக்கும். வழக்கமான கடல் அலைகளுக்கு இடையிலான இடைவெளி சுமார் 8 முதல் 10 வினாடிகள் மட்டுமே இருக்கும்.கள்ளக்கடல் ஏற்படும் நேரத்தில் கடல் வெளிப்புறமாக அமைதியாகவே காணப்படலாம்.
வானிலையும் இயல்பாக இருக்கக்கூடும். ஆனால் திடீரென உயரமான அலை கரையை கடந்து வந்து சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் கடல் நீரை புகுத்தும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே இதற்கு கள்ளக்கடல் என பெயரிடப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் அலைகள் திடீரென கரையை தாக்குவதால், கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளை கடலுக்குள் இழுத்துச் செல்லும் அபாயம் உள்ளது. கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளையும் ஒன்றோடு ஒன்று மோதச் செய்து சேதப்படுத்தக்கூடும்.
மேலும், கடல் ஏற்றத்துடன் கள்ளக்கடல் அலைகள் இணைந்தால், கடல் நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கன்னியாகுமரி கோள கடற்கரை பகுதியில் ஏற்பட்ட கள்ளக்கடல் காரணமாக பல வீடுகள் மற்றும் படகுகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய எச்சரிக்கையை தொடர்ந்து, சிறிய படகுகள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையில் நிறுத்தப்படும் படகுகளையும் போதிய இடைவெளியுடன் பாதுகாப்பாக நிறுத்துமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கடற்கரை சுற்றுலா, கடலில் குளித்தல், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா மையங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கள்ளக்கடல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.கன்னியாகுமரி மாவட்டத்திலும் சுமார் 8 ஆயிரம் விசைப்படகுகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 1,500 நார் இழை படகுகள் கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைகுளம் மற்றும் தூத்துக்குடி துறைமுகப் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் சுமார் 800 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கள்ளக்கடல் எச்சரிக்கை தொடரும் நிலையில், கடலோர மக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Suddenly sea roars Restrictions on beaches due to severe sea warning 2 days