அமெரிக்காவை விமர்சிக்கப்போய் வசமாகச் சிக்கிய டிரம்ப்...! இந்தியாவில் நடக்காத தேர்தலை நடந்ததாகப் பதிவிட்டு சர்ச்சை...!
Trump gets caught criticizing America Controversy after posting that an election that didnt happen in India took place
அமெரிக்காவின் தேர்தல் நடைமுறையை விமர்சித்துள்ள முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவில் நடைபெறாத ஒரு தேர்தலை நடைபெற்றதாக குறிப்பிட்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது.டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்திய ஜனாதிபதி தேர்தலில் 12.5 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்த சிறிது நேரத்திலேயே அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால், அமெரிக்காவில் தேர்தல் முடிவுகளை கணக்கிடுவதற்கு பல வாரங்கள் ஆகின்றன. அமெரிக்காவின் வாக்குப்பதிவு நடைமுறை ஊழல் நிறைந்ததாக உள்ளது” என்று விமர்சித்திருந்தார்.டிரம்ப் குறிப்பிட்ட 12.5 கோடி வாக்குகள் தொடர்பான புள்ளிவிவரங்கள் இந்திய தேர்தலுடன் பொருந்தவில்லை என்று சமூக வலைதளப் பயனர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவர் குறிப்பிட்ட வாக்கு எண்ணிக்கை, பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் பதிவான வாக்குகளுடன் பெருமளவில் ஒத்துப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஜனாதிபதி தேர்தலில் 12 கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அங்கு மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அடுத்தடுத்து வெளியாகின.
இதனால், பிரேசில் தேர்தல் தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட டிரம்ப், தவறுதலாக இந்தியா என்று பதிவிட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.அமெரிக்காவில் தேர்தல் நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வரும் டிரம்ப், ஏற்கனவே இந்தியாவின் தேர்தல் முறையை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்தியாவில் பின்பற்றப்படும் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறையை அவர் பாராட்டியிருந்தார். கடந்த ஆகஸ்டு மாதம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அமெரிக்காவில் புகைப்பட அடையாள அட்டை இல்லாமலேயே எவ்வாறு தேர்தல் நடத்தப்படுகிறது என்று தனது நிர்வாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறாத தேர்தலை நடைபெற்றதாக குறிப்பிட்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு தற்போது அமெரிக்காவில் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகியுள்ளது.
English Summary
Trump gets caught criticizing America Controversy after posting that an election that didnt happen in India took place