“ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருப்பாரா?” – பிரசாந்த் குறித்து மனம் திறந்த நடிகை ரோஜா
Can a man be this handsome Actress Roja opens up about Prashanth
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த பிரசாந்த், அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களால் ‘டாப் ஸ்டார்’ என்று கொண்டாடப்பட்டவர். அழகு, நடிப்பு, நடனத் திறமை என பல்வேறு அம்சங்களால் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அவர், அப்போது முன்னணியில் இருந்த நடிகர்களில் ஒருவராக இருந்தார். இந்நிலையில், பிரசாந்த் குறித்து நடிகை ரோஜா பேசியுள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த், ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே வெற்றிப் படமாக அமைந்ததால், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. இளம் வயதிலேயே கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட பிரசாந்த், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.
இதையடுத்து பாலுமகேந்திரா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த பிரசாந்த், மணிரத்னம் இயக்கிய ‘திருடா திருடா’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து 90களின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தார்.
அந்த காலகட்டத்தில் இன்றைய முன்னணி நடிகர்களான விஜய், அஜித் உள்ளிட்டோரை விடவும் பிரசாந்த் மிகப்பெரிய ரசிகர் ஆதரவுடன் இருந்ததாக அவரது ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால், அவரது திரைப்பயணம் தொடர்ந்து அதே வேகத்தில் சென்றிருந்தால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை அவர் தக்கவைத்திருப்பார் என்ற கருத்தும் சினிமா வட்டாரங்களில் அவ்வப்போது முன்வைக்கப்படுகிறது.
ஆனால், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் மற்றும் அதன் தாக்கம் அவரது சினிமா பயணத்திலும் பிரதிபலித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அவர் சில காலம் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் போனதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் காரணமாக பட வாய்ப்புகளும் படிப்படியாக குறைந்ததாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரசாந்த். விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், ‘அந்தகன்’ படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இருப்பினும், இந்த இரு படங்களும் அவர் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை. திரைப்படங்களைத் தாண்டி தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், பிரசாந்த் குறித்து நடிகை ரோஜா சமீபத்திய பேட்டியில் பேசியுள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரசாந்துடன் இணைந்து நடித்த அனுபவத்தை நினைவுகூர்ந்த ரோஜா, தான் முதன்முதலில் பார்த்த அழகான கதாநாயகன் பிரசாந்த்தான் என்று தெரிவித்துள்ளார்.
“நான் முதன்முதலில் பார்த்த அழகான ஹீரோ என்றால் அது பிரசாந்த்தான். இதை அவரிடமே நான் சொல்லியிருக்கிறேன். உன்னைப் பார்க்கும்போதுதான் ஒரு ஆண் இவ்வளவு அழகாக இருப்பாரா என்று தெரிந்துகொண்டேன் என்று அவரிடம் கூறினேன். பிரசாந்த் அவ்வளவு அழகான, க்யூட்டான ஹீரோ” என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
ரோஜா மற்றும் பிரசாந்த் இணைந்து நடித்த ‘செம்பருத்தி’ திரைப்படம் இருவரது திரைப்பயணத்திலும் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. அந்த படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த அனுபவத்தின் அடிப்படையிலேயே ரோஜா இவ்வாறு பேசியுள்ளார்.
90களில் முன்னணி கதாநாயகனாக இருந்த பிரசாந்த் தற்போது மீண்டும் சினிமாவில் தனது இடத்தைப் பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், அவரைப் பற்றிய ரோஜாவின் இந்த பழைய நினைவுகளும் பாராட்டுகளும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
English Summary
Can a man be this handsome Actress Roja opens up about Prashanth