“கருணையாக இருப்பது பலவீனம் இல்லை.. இதுதான் என் உண்மையான முகம்!” – விமர்சனங்களுக்கு ராஷ்மிகா மந்தனா பதிலடி
Being kind is not a weakness This is my true self Rashmika Mandanna hits back at critics
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது நடிப்பு மற்றும் திரைப்பயணத்தைத் தாண்டி இயல்பான குணத்தாலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர். இந்நிலையில், தான் கருணையுடன் இருப்பது போல் நடிப்பதாக வரும் விமர்சனங்களுக்கு ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கன்னட திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா, பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஆரம்பகாலத்தில் அவரது நடிப்பு மற்றும் தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது நடிப்புத் திறனை மேம்படுத்துவதிலும், தொடர்ந்து உழைப்பதிலும் கவனம் செலுத்திய ராஷ்மிகா, அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறிய அவர், தமிழிலும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன்பிறகு ஹிந்தி திரையுலகில் கவனம் செலுத்திய ராஷ்மிகாவுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ரன்பீர் கபூர், சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் இந்திய அளவில் அறியப்படும் பான் இந்தியா நடிகையாக மாறினார்.
இதற்கிடையே, ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. நீண்டகாலமாக இருவரது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
திருமணத்துக்குப் பிறகும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது திரைப்பணிக்கு விஜய் தேவரகொண்டா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ‘காக்டெயில் 2’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.
இதற்கிடையே, ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பழகும் விதம் மற்றும் பிறரிடம் காட்டும் அன்பு குறித்து சில விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, அவர் இயல்பாக கருணையுடன் நடந்து கொள்வது போல் வெளியில் காட்டிக்கொள்கிறார் என்றும், அது ஒரு வகையான “ஓவர் ஆக்டிங்” என்றும் சிலர் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இந்த விமர்சனங்களுக்கு தற்போது ராஷ்மிகா மந்தனா நேரடியாக பதிலளித்துள்ளார். கருணையுடன் இருப்பது பலவீனமான குணம் அல்ல என்று கூறிய அவர், தன்னை சுற்றி எதிர்மறையான விஷயங்கள் அதிகமாக இருக்கும்போது கருணையுடன் இருப்பதையே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
“கருணையாக இருப்பது பலவீனமான ஒன்று இல்லை. நம்மை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் நடக்கும்போது, கருணையுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கருணை ஒருவித நேர்மறையான சூழலை உருவாக்கும். பலரும் அதை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள். அதுகுறித்து எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை” என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.
மேலும், கருணையுடன் இருப்பது தனது இயல்பான குணம் என்றும், அதை யாரிடமும் நியாயப்படுத்த வேண்டிய அவசியம் தனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். “எல்லோரும் எல்லோருக்கும் பிடித்தவர்களாக இருக்க முடியாது. நான் இப்படித்தான் இருக்க விரும்புகிறேன். அதில்தான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து, “கருணையுடன் இருப்பது போல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதுதான் என்னுடைய உண்மையான முகம். நான் பொய்யாக நடிக்க மாட்டேன்” என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா, ஒருபுறம் படங்கள் தொடர்பாகவும், மறுபுறம் தனது தனிப்பட்ட குணம் குறித்தும் வரும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்த நிலையில், கருணை குறித்த அவரது வெளிப்படையான பதில் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
English Summary
Being kind is not a weakness This is my true self Rashmika Mandanna hits back at critics