அரசியலில் குதிக்கபோகும் சிவகார்த்திகேயன்! திமுக தந்த அசைன்மெண்ட்? விஜய்யின் ஆட்டத்தை கலைக்க திட்டம்?
Sivakarthikeyan set to plunge into politics An assignment from the DMK A plan to disrupt Vijay game
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் சமீபகாலமாக தங்களது ரசிகர் மன்ற நிர்வாகிகளைத் தொடர்ந்து சந்தித்து வருவது அரசியல் வட்டாரங்களிலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சென்னை போரூரில் சந்தித்ததைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் சூர்யாவும் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயனும் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இந்த சூழலில், மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, Realone மீடியா சேனலுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனின் சந்திப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சேகுவேரா, “விஜய் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களாகிவிட்டது. அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது இப்போதும் புதிராகவே உள்ளது. முன்பு சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு பயந்தார்கள். விஜயகாந்துக்குப் பிறகு அந்த தயக்கம் இருந்தது. ஆனால் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, நாமும் அரசியலுக்கு செல்லலாம் என்ற எண்ணம் மற்ற நடிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும், “உழைப்பு குறைவு, இணையத்தில் மட்டும் புரமோஷன் செய்தால் போதும், அரசியலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கிறார்கள். தனுஷ், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்” என்றும் சேகுவேரா விமர்சித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்கக் கூட்டம் நடைபெற்ற விதத்தையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். “இது வெறும் ரசிகர்கள் சந்திப்புதானா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. சாதாரணமாக நற்பணி இயக்கக் கூட்டம் என்றால் ரசிகர்களை சந்திப்பது, புகைப்படம் எடுத்துக்கொள்வது, சில அறிவுரைகள் வழங்குவது என்று முடிந்துவிடும். ஆனால் இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்பட்ட விதமும், சிவகார்த்திகேயன் அவர்களுடன் நெருக்கமாக பழகிய விதமும் கவனிக்க வேண்டியதாக உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றுவது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது போன்ற நடவடிக்கைகள் எதிர்கால அரசியல் களத்துக்கான அடித்தளமாக இருக்கலாம் என்ற பார்வையும் உருவாகியுள்ளதாக சேகுவேரா கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோர் இதுவரை பொதுமக்களுக்காக பெரிய அளவில் களத்தில் இறங்கி பணியாற்றியிருக்கிறார்களா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். “வெள்ளம், புயல், கொரோனா காலகட்டம் என பொதுமக்களுக்காக களத்தில் இறங்கி அவர்கள் வேலை பார்த்திருக்கிறார்களா? அவர்கள் இன்னும் முழுமையாக 50 படங்கள்கூட நடிக்கவில்லை. சினிமாவிலேயே சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மாறாக, நடிகர் சிவாஜி கணேசன் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிறகே அரசியலுக்கு வந்ததை சுட்டிக்காட்டிய சேகுவேரா, விஜய் அரசியலுக்கு வந்திருப்பதும் நீண்டகால திட்டத்துடன் எடுக்கப்பட்ட ரிஸ்க் என தெரிவித்துள்ளார். விஜயகாந்த் மறைந்துவிட்டது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகியது, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இல்லாத அரசியல் சூழல் உள்ளிட்ட பல காரணிகள் விஜய்க்கு சாதகமான காலகட்டத்தை உருவாக்கியதாகவும் அவர் தனது பார்வையை தெரிவித்துள்ளார்.
மேலும், சிவகார்த்திகேயன் கூட்டத்தில் பேசிய “நான் செல்ஃப் மேட் கிடையாது. பப்ளிக் மேட். பீப்பிள் மேட்” என்ற வார்த்தைகளையும் சேகுவேரா தனது பார்வையில் முக்கியமானதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தைகள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடியவை அல்ல என்றும், விஜய்யை மனதில் வைத்தே சிவகார்த்திகேயன் இதை கூறியிருக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு பின்னால் திமுகவின் தூண்டுதல் இருப்பதாகவும், விஜய்யின் அரசியல் வளர்ச்சியை குழப்புவதற்காகவே அவரை அரசியல் களத்தில் முன்னிறுத்தும் முயற்சி நடைபெறுவதாகவும் சேகுவேரா குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக இடைத்தேர்தலுக்கு முன்பாகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் கூட்டத்தில் திரண்டவர்களை அடிப்படையாக வைத்து படிப்படியாக பெரிய அளவிலான அமைப்பை உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் சேகுவேரா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலில் நூற்றுக்கணக்கானோர், பின்னர் ஆயிரக்கணக்கானோர் என அமைப்பை விரிவுபடுத்தி எதிர்காலத்தில் அரசியல் சக்தியாக மாற்றும் நோக்கம் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அவரது நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பை வைத்து அரசியல் வருகையை உறுதி செய்ய முடியாது. அதேபோல், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் திமுக இருப்பதாக சேகுவேரா தெரிவித்திருப்பதும் அவரது அரசியல் பார்வை மற்றும் குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர் சந்திப்பு தற்போது சினிமாவை தாண்டி அரசியல் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
English Summary
Sivakarthikeyan set to plunge into politics An assignment from the DMK A plan to disrupt Vijay game