மனைவி ஜாக்கெட்டில் அப்படி செய்தது ஏன்? அம்பானி குடும்ப நெருக்கம் குறித்து அட்லீ விளக்கம்!
Why did he do that to his wife's blouse Atlee explains the close bond with the Ambani family
தமிழில் விஜய்யை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்த அட்லீ, அடுத்ததாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் அட்லீயின் மார்க்கெட்டும் மவுசும் மேலும் அதிகரித்தது.
‘ஜவான்’ வெற்றிக்குப் பிறகு பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலரும் அட்லீயுடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. தற்போது ‘ராக்கா’ உள்ளிட்ட படப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் அட்லீ, அடுத்தடுத்து பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்துடனும் அட்லீ நெருக்கமாக இருப்பது குறித்து கடந்த சில காலமாகவே சமூக வலைதளங்களில் பல்வேறு பேச்சுகள் எழுந்து வருகின்றன. குறிப்பாக அம்பானி குடும்பத்தின் விசேஷ நிகழ்ச்சிகளில் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் கலந்துகொள்வது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானியின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றபோது, உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பிரபலங்கள் அதில் கலந்துகொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில் அட்லீயும் தனது மனைவி பிரியாவுடன் பங்கேற்றார். அப்போது பிரியாவின் ஜாக்கெட்டில் இடம்பெற்றிருந்த வாசகத்தை கேமராவுக்கு காண்பிக்கும் வகையில் இருவரும் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, அட்லீ அம்பானி குடும்பத்துடன் நெருக்கமாக இருப்பது குறித்தும், அதன் மூலம் பாலிவுட்டில் பல வாய்ப்புகளைப் பெற முயற்சிப்பதாகவும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. சமூக வலைதளங்களில் அவரை ட்ரோல் செய்தவர்களும் இருந்தனர்.
இந்த நிலையில், ‘பத்தா’ படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் இதுகுறித்து அட்லீ பேசியதாக கூறப்படுகிறது. அப்போது தனது தோற்றத்தை வைத்து வரும் விமர்சனங்களுக்கும், அம்பானி குடும்பத்துடனான தனது நட்பை விமர்சிப்பவர்களுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.
“நான் கருப்புதான். சுமாராகத்தான் இருக்கிறேன். அதுதான் என்னை கேலி செய்பவர்களின் அபிப்ராயமாக இருக்கிறது. ஆனந்த் அம்பானி எனக்கு நெருக்கமான நண்பன். மும்பையில் நான் கஷ்டப்பட்ட நேரத்தில் எனக்கு கை கொடுத்து, என்னுடன் இருந்தவன் அவன். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவர்களுக்கு எல்லாம் நான் என் படங்கள் மூலமாகத்தான் பதில் சொல்லிக்கொண்டு வருகிறேன்” என்று அட்லீ பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லீயின் இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, “மும்பையில் கஷ்டப்பட்ட நேரத்தில் ஆனந்த் அம்பானி தனக்கு ஆதரவாக இருந்தார்” என்று அட்லீ கூறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதே நேரத்தில், அட்லீ பாலிவுட்டுக்குச் சென்றபோது ஏற்கனவே தமிழில் முன்னணி இயக்குநராக அடையாளம் பெற்றிருந்தார் என்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். அப்படியிருக்கும்போது மும்பையில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து அட்லீ வெளிப்படையாக பேசுவதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
எது எப்படியிருந்தாலும், விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலளிப்பதைவிட தனது படங்களின் வெற்றியின் மூலம் பதில் அளிப்பேன் என்ற அட்லீயின் கருத்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Why did he do that to his wife's blouse Atlee explains the close bond with the Ambani family