ராமேசுவரத்தில் அதிர்ச்சி...! கடற்கரையெங்கும் சடலமாக மிதக்கும் மீன்கள்...! பின்னணியில் இருக்கும் விபரீதம் என்ன...?
Shock Rameswaram Dead fish floating over beach What mystery behind
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. விசைப்படகுகள், நாட்டுப்படகுகள், சிறிய வத்தைகள் மற்றும் கரைவலைகள் மூலம் தினந்தோறும் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். குறிப்பாக மன்னார் வளைகுடா கடற்பகுதி வளமான மீன் வளம் கொண்ட பகுதியாக அறியப்படுகிறது.

இந்நிலையில், ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த இரண்டு நாட்களாக ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தும் வகையில் ஏராளமான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.குறிப்பாக கம்பிப்பாடு முதல் அரிச்சல்முனை வரையிலான தெற்கு கடற்கரைப் பகுதியில் பல இடங்களில் நூற்றுக்கணக்கான மீன்கள் சிதறிக் கிடப்பது காணப்படுகிறது.
கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்வையிட்டு செல்கின்றனர்.இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கையில், கரை ஒதுங்கி கிடக்கும் மீன்கள் ‘ஊமை கிளாத்தி’ வகையைச் சேர்ந்தவை என்றும், இவ்வகை மீன்கள் பொதுவாக மனிதர்கள் உணவாக பயன்படுத்தப்படுவது குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
கோழித் தீவன உற்பத்திக்காக இம்மீன்கள் பெருமளவில் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்படுவதாகவும், தற்போது ஒரு கிலோ ரூ.15 வரை விற்பனையாகி வருவதாகவும் கூறினர்.
மேலும், இந்த மீன்கள் பெரும்பாலும் கடலின் மேற்பரப்பில் கூட்டமாக காணப்படும் தன்மை கொண்டவை என்றும், கடலின் நீரோட்ட மாற்றம், பலத்த அலைச்சீற்றம் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் ஏதேனும் இதற்கு பின்னணியாக உள்ளனவா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மீன்கள் கரை ஒதுங்கி வரும் சம்பவம் அப்பகுதியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதற்கான உண்மையான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Shock Rameswaram Dead fish floating over beach What mystery behind