#சென்னை: போதை மறுவாழ்வு மையத்தில் பள்ளி மாணவன் உயிரிழப்பு..!!
School student dies in private drug rehabilitation center
சென்னை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே நெதிபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மகன் மனோஜ் குமார். இவர் கும்மிடிப்பூண்டி தலையாரிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
மனோஜ் குமார் கடந்த சில நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் போதைப் பழக்கத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது தாய் அகிலா மனோஜ் குமாரை செங்குன்றம் அடுத்த அஞ்சிவாக்கம் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த ஜனவரி மாதம் சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் மனோஜ் குமார் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சாப்பிட்டுவிட்டு கழிவறை சென்ற பொழுது மயங்கி இருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக மறுவாழ்வு மையத்தில் இருந்தவர்கள் மனோஜ் குமாரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மனோஜ் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

மறுவாழ்வு மையத்தில் சேர்த்து 11 நாட்கள் ஆன நிலையில் திடீரென மனோஜ் குமார் உயிரிழந்ததாக அகிலாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. மறுவாழ்வு மையத்தில் உயிரிழந்த மனோஜ் குமாரின் தோள்பட்டை, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் தழும்புகளுடன் காயம் உள்ளதால் தனது மகன் உயிர் இழப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகிலா சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
School student dies in private drug rehabilitation center