பச்சிளம் குழந்தையை காப்பாற்ற ரூ.17 கோடி மதிப்பில் ஊசி! தாய் கண்ணீர் மல்க மனு! அரசு உதவிக்கரம் நீட்டுமா?
Save child Rs 17 crores worth injection mother tearful petition
குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கும் ரூ.17 கோடி மதிப்புடைய ஊசியை தேவை என்பதால் அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என இளம்பெண் ஒருவர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
திருப்பத்தூர்: குரிசிலாப்பட்டு அடுத்துள்ள வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன் (வயது 36). இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ரம்யா (வயது 31). இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் தனது 6 மாத கைக்குழந்தையுடன் நேற்று சென்று கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.
அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது, எனக்கு 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. ஆரம்ப காலத்தில் ஆரோக்கியமாக இருந்த எனது குழந்தை 7 மாதங்களுக்கு பிறகு உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு உயிரிழந்தது.
இதனை அடுத்து எனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையும் ஆரோக்கியமாக பிற குழந்தைகள் போலவே இருந்து வந்த நிலையில் சில நாட்களுக்கு பிறகு, குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டது.
3 மாதங்கள் ஆனவுடன் குழந்தையின் காலில் அசைவுகள் எதுவும் இல்லாமலும், சில நாட்களில் குழந்தையின் கழுத்தும் நிற்காமல் அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்கிடையே எனது கணவரும் சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.
இது எனக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. பின்னர் என் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று நான் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையை உலகிலேயே அரிய வகை நோயான 'ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி'' வகை -1 என்ற நோய் தாக்கியுள்ளதாகவும், இது போன்ற நோய் உலகில் ஒரு சிலருக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் குழந்தையை காப்பாற்ற முடியாது என தெரிவித்தனர். இந்த நோய்க்கான ஊசி இந்தியாவில் இல்லை. அமெரிக்காவில் தான் உள்ளது. அந்த ஊசியின் விலை ரூ.17 கோடி என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது எனக்கு மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர்கள் அளித்த காலக்கெடு குறைந்து கொண்டே வருவதால் குழந்தையை காப்பாற்ற அந்த ஊசியை செலுத்த தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கும் இதே நோய் தாக்கியுள்ளது. அதன் பிறகு பல கோடி மதிப்பில் செலுத்தப்பட்ட ஊசியால் தற்போது அந்த குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது.
என் குழந்தையையும் அது போலவே காப்பாற்றி தர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர், 'இது தொடர்பாக மருத்துவர் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனரிடம் விசாரித்து குழந்தையை காப்பாற்றுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுத்து அதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.
English Summary
Save child Rs 17 crores worth injection mother tearful petition