சகாயம் பாதுகாப்பு விவகாரம்: தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த சிறப்பு நீதிமன்றம்!
Sagayam case
சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வாக்குமூலம் அளிக்காததையடுத்து, மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தமிழக காவல்துறையை கடும் கேள்விகளுக்கு உட்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கடந்த வாரம் சகாயத்திற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தனக்கு பாதுகாப்பு இல்லாததால் ஆஜராக முடியாது என அவர் தெரிவித்தார்.
தனது பாதுகாப்பு முறையீடு தவறாக திருப்பி விடப்பட்டதாகவும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சகாயம் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, காவல்துறை விளக்கமளித்ததாவது: 2014 முதல் 2023 வரை சகாயத்துக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால் 2023-ஆம் ஆண்டு பாதுகாப்பு மறுஆய்வு கூட்டத்தில், மொத்தம் 22 பேருக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டதால், அவர்களது பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது. அதன்படி சகாயத்துக்கான பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. “விசாரணைக்காக எவரும் அச்சமின்றி நேரில் வர வேண்டியது அவசியம். சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது ஏன்?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “தேவையான பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், மத்திய பாதுகாப்புப் படையை கொண்டு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும்” என எச்சரிக்கையும் விடுத்தார்.