பகல், இரவாக நடக்கும் பகீர் கொள்ளை...! அதிகாரிகளும் கூட்டு சேர்ந்துட்டாங்களா...? திருவாரூர் ஏரி விவகாரத்தில் தினகரன் எழுப்பிய பலத்த சந்தேகம்...!
robbery that happens day and night authorities also cahoots Dhinakaran strong suspicions about Thiruvarur Lake issue
திருவாரூர் மாவட்டத்தில் ஏரியில் இருந்து சட்டவிரோதமாக மண் அகற்றப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகவும், இதை எதிர்த்து குரல் கொடுத்த இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில், வண்டல் மண் அகற்றுவதற்காக வழங்கப்பட்ட அனுமதியை தவறாக பயன்படுத்தி, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகளவில் மண் தோண்டி எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தவும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும் வழங்கப்பட்ட அனுமதியை முறைகேடாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், அந்த முறைகேடுகளை சுட்டிக்காட்டிய இளைஞர்கள் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு வகுத்துள்ள விதிமுறைகளை முற்றிலும் புறக்கணித்து, அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகமாக இயந்திரங்கள் மூலம் பகல், இரவாக மண் அகற்றப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காவலர்களும், தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்களும் துணைபோகிறார்களா என்ற சந்தேகம் அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, துளசேந்திரபுரம் கண்ணாரப்பேட்டை வடக்கு ஏரியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், முறைகேட்டை எதிர்த்து கேள்வி எழுப்பிய இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் காவலர்களையும் தமிழக அரசையும் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
robbery that happens day and night authorities also cahoots Dhinakaran strong suspicions about Thiruvarur Lake issue