பெண்களே மிஸ் பண்ணாதீங்க...! கோவை ஆதியோகி வளாகத்தில் இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்...!
Ladies dont miss out Free breast cancer screening camp Adiyogi Complex Coimbatore
கிராமப்புற மற்றும் மலைவாழ் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறியும் நோக்கில், ஈஷா அவுட்ரீச் இயக்கமும் கங்கா மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவப் பரிசோதனை முகாமை இன்று ஆதியோகி வளாகத்தில் நடத்தின.
இந்த மருத்துவ முகாமில், ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். அவர்களுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் மூலம் மார்பகப் புற்றுநோய்க்கான முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நோய் தடுப்பு மற்றும் ஆரம்பகட்ட அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பேசிய கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை மற்றும் புனரமைப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் ராஜா சண்முக கிருஷ்ணன், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ‘ப்ராஜக்ட் சக்தி’ திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாம் தங்களின் 150-ஆவது மருத்துவ முகாம் என்றும், இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பரிசோதனைகளில் மார்பகப் புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட 81 பெண்களுக்கு முழுமையாக இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதிகளவில் சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வரும் ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து இந்த சிறப்பு முகாமை நடத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்த அவர், முகாமில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் இலவச பரிசோதனைகளுடன் தேவையான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக கூறினார்.
ஈஷா அவுட்ரீச் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ம. சந்திரகாசா பேசுகையில், மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கங்கா மருத்துவமனை தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கி வருவதாக தெரிவித்தார்.ஈஷா அவுட்ரீச் இயக்கம் இதுவரை 18 மருத்துவ முகாம்களில் கங்கா மருத்துவமனையுடன் இணைந்து செயல்பட்டுள்ளதாகவும், அந்த முகாம்கள் மூலம் 873 பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதில் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட்ட 7 பெண்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் முழுமையாக குணமடையும் வரை மருத்துவமனை தொடர்ந்து ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பழங்குடியின பெண்கள் ஆரம்பத்தில் மருத்துவ முகாம்களில் பங்கேற்க தயக்கம் காட்டினாலும், தொடர்ச்சியான விழிப்புணர்வு முயற்சிகளால் தற்போது ஆர்வத்துடன் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும், குறிப்பாக பழங்குடியின பெண்களுக்கு முன்னுரிமை அளித்து 150-ஆவது மருத்துவ முகாமை நடத்திய கங்கா மருத்துவமனைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தார்.
English Summary
Ladies dont miss out Free breast cancer screening camp Adiyogi Complex Coimbatore