இனி 'குடி'ப்பதும் கஷ்டம்... டாஸ்மாக் பாட்டில்களுக்கு ரூ.10 செஸ் வரி...? - உயர்நீதிமன்றத்தில் வெளியான பகீர் தகவல்...!
It now difficult drink 10 cess TASMAC bottles shocking information released High Court
சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், வனவிலங்குகளின் நலனையும் உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை நிலையங்களில், ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வசூலித்து, காலி பாட்டிலை திருப்பி ஒப்படைக்கும் போது அந்தத் தொகையை மீண்டும் வழங்கும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என். சதீஷ்குமார் மற்றும் டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் முறையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், இனி பாட்டிலுக்கு தனியாக ரூ.10 வசூலிக்கும் நடைமுறைக்கு பதிலாக, அந்தத் தொகையை மதுபானத்தின் அதிகபட்ச விற்பனை விலையிலேயே இணைத்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காலி மதுபான பாட்டில்களை சேகரித்தல், அவற்றை திரும்பப் பெறுதல், எடுத்துச் செல்லுதல் மற்றும் மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமே ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மதுவிலக்குத் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மதுபானங்களின் அதிகபட்ச விற்பனை விலையுடன் ரூ.10-ஐ செஸ் வரியாக இணைக்க அரசுக்கு வணிக வரித்துறை ஆணையர் கருத்துரு வழங்கியுள்ளதாகவும், அதற்கேற்ப மதிப்புக் கூட்டுவரி தொடர்பான சட்ட விதிகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை பதிவு செய்த உயர்நீதிமன்ற அமர்வு, வழக்கின் விசாரணையை ஆறு வாரங்களுக்கு ஒத்திவைத்து, மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
English Summary
It now difficult drink 10 cess TASMAC bottles shocking information released High Court