உஷார்...மூடி இல்லாத கிணறுகளால் தொடரும் ஆபத்து...! தூத்துக்குடியில் தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு...!
danger uncovered wells continues worker died after falling well Thoothukudi
தூத்துக்குடி அருகே கரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி, தோட்டக் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அருகேயுள்ள கீழத்தட்டப்பாறையைச் சேர்ந்த சுப்பையா என்ற மணி (45), கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

கீழத்தட்டப்பாறை கைலாசபுரம் பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜனுக்கு சொந்தமான தோட்டத்தில், சக்தி மற்றும் அய்யனடைப்பைச் சேர்ந்த முனியசாமி ஆகியோருடன் இணைந்து கரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணியின் ஒரு பகுதியாக எரிந்து கொண்டிருந்த கரி மூட்டத்தின் மீது தண்ணீர் ஊற்றுவதற்காக, தோட்டத்தில் இருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக சுப்பையா கால்தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்க முயன்றனர். இருப்பினும், அந்த முயற்சி பலனளிக்காமல் போனது. நீரில் மூழ்கிய சுப்பையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிப்காட் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணங்கள் மற்றும் சம்பவத்தின் முழு விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
danger uncovered wells continues worker died after falling well Thoothukudi