புதுக்கோட்டையில் மெகா கொள்ளை...! பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை ரூ.7 லட்சம் சுருட்டிய மர்மகும்பல்...!
robbery Pudukkottai mysterious gang broke locked house and stole 50 pounds jewelry worth 7 lakh
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியத்துக்குட்பட்ட தொண்டைமான் நல்லூர் வீரம்பட்டி பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற துணிச்சலான கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப் பணத்தை அபகரித்து தப்பிச் சென்றுள்ளனர்.வீரம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் (45) விவசாயத்துடன் ஒப்பந்த அடிப்படையில் சென்ட்ரிங் பணியும் செய்து வருகிறார்.

அவரது மனைவி ஷீலாராணி, அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவன கேண்டீனில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.சம்பவத்தன்று குழந்தைகள் பள்ளிக்கும், தம்பதியினர் தங்களது பணிகளுக்காக வெளியே சென்றிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து கணநேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதையும், வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கீரனூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிமாறன் மற்றும் மாத்தூர் காவலர் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
robbery Pudukkottai mysterious gang broke locked house and stole 50 pounds jewelry worth 7 lakh