இன்ஸ்டா ரீல்ஸ்க்காக இப்படியா பண்றது...? விழுப்புரத்தில் பெட்ரோல் குண்டு வெடிக்கச் செய்து ரீல்ஸ் எடுத்த 4 பேர்...! அடுத்து நடந்தது என்ன..?
Are you doing this Insta Reels 4 people exploded petrol bombs Villupuram and took reels What happened next
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை, இன்றைய இளைஞர்களை எந்த எல்லை வரை அழைத்துச் செல்கிறது என்பதற்கு விழுப்புரத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சியூட்டும் உதாரணமாக அமைந்துள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் காணொளி பதிவு செய்ய வேண்டும் என்ற விபரீத ஆசையில், இளைஞர்கள் எரிபொருளை பயன்படுத்தி ஆபத்தான செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ், 48. இவர் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகர் பகுதியில் காளிதாஸ் புதிதாக வீடு கட்டி வருகிறார்.அந்தக் கட்டிடத்தின் அருகே நேற்று முன்தினம் இரவு நான்கு இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

போதை அதிகரித்த நிலையில், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்துள்ளனர். பின்னர் அதனை காலி மதுபாட்டிலில் நிரப்பி, திரி பொருத்தி தீ வைத்ததாக கூறப்படுகிறது.தீப்பற்றிய அந்த பாட்டிலை புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் முன்புறச் சுவரை நோக்கி வீசிவிட்டு நால்வரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சுவரில் விழுந்த அந்த பாட்டில் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததுடன், திடீர் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொதுமக்கள், அங்கு நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான தகவல்களையும் திரட்டினர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த தயா, 21, என்பவரும் அவரது நண்பர்கள் மூவரும் சேர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.சமூக வலைதளத்தில் அதிக பார்வைகளைப் பெறும் வகையில் ஒரு பரபரப்பான காணொளியைப் பதிவு செய்து வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில், அவர்கள் எரிபொருள் நிரப்பிய பாட்டிலைத் தயாரித்து வெடிக்கச் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமூக வலைதளப் பதிவுக்காக ஆபத்தான முறையில் செயல்பட்ட இந்தச் சம்பவம், அவர்களின் உயிருக்கு மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.இந்தச் சம்பவம் தொடர்பாக தயா உள்ளிட்ட நான்கு பேர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து தயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவருடன் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மற்ற மூவரையும் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் கவனம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது எவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Are you doing this Insta Reels 4 people exploded petrol bombs Villupuram and took reels What happened next