அதிர்ச்சி...! உயிரோடு வாழும் பெண்ணுக்கு இறப்பு சான்றிதழ் தந்த அதிகாரிகள்...! - மாவட்ட ஆட்சியரிடம் புகார் - Seithipunal
Seithipunal


உயிருடன் இருக்கும் பெண்ணையே இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைப் பற்றி வழங்கப்பட்ட அந்தச் சான்றிதழை பார்த்து அதிர்ந்த பெண், “நான் உயிருடன் இருக்கும்போது எப்படி இறந்ததாகச் சான்றிதழ் வழங்க முடியும்?” என கேள்வி எழுப்பி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் வீட்டிற்கு காவலர்கள் விசாரணைக்காகச் சென்றுள்ளனர்.

அப்போது, “பெருமாள் என்பவர் யார்?” என அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், “அவர் என்னுடைய மகன்” என தெரிவித்துள்ளார்.இதையடுத்து, “பெருமாள் இறந்துவிட்டார். அவரது தாயாரும் இறந்துவிட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்குச் சொந்தமான நிலம் மற்றும் நகைகளைப் பெற்றுத் தருமாறு பெருமாளின் மனைவி மனு அளித்துள்ளார்.

அது தொடர்பாக விசாரணை நடத்தவே வந்துள்ளோம்” என்று காவலர்கள் தெரிவித்துள்ளனர்.இதைக் கேட்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். “பெருமாளின் தாய் நான்தான். நான் உங்கள் கண் முன்னால் உயிருடன் நிற்கிறேன். என்னை எப்படி இறந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தனது மகன் பெருமாள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததாகவும், அவரது இறப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கைகூட இதுவரை தன்னிடம் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அப்போது காவலர்கள், அந்தப் பெண் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்ட இறப்பு சான்றிதழைக் காட்டியுள்ளனர்.

அதைப் பார்த்த அவர், “இது எப்படி சாத்தியம்? நான் உயிருடன் இருக்கிறேன்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரது மருமகள் சுந்தரி போலியான தகவல்கள் அல்லது ஆவணங்களைப் பயன்படுத்தி இறப்பு சான்றிதழ் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதையடுத்து, தனது அடையாளத்தை உறுதி செய்ய ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் காவல் நிலையத்திற்கு வருமாறு காவலர்கள் அந்தப் பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி காவல் நிலையத்திற்கு சென்ற அவர், தனது ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து தான் உயிருடன் இருப்பதை நிரூபித்துள்ளார்.பின்னர், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வி.ஏ.ஓ. அலுவலகத்திற்குச் சென்ற அந்தப் பெண், “நான் உயிருடன் இருக்கிறேன். அப்படியிருக்கும்போது நான் இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் வழங்கியது எப்படி?” என அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு வி.ஏ.ஓ., உரிய ஆதாரங்களின் அடிப்படையில்தான் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “நான் இன்றுவரை நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வருகிறேன். நான் உயிருடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது என்னை இறந்ததாக எதன் அடிப்படையில் பதிவு செய்தீர்கள்?” என கேட்டுள்ளார்.தொடர்ந்து, தன்னை இறந்ததாகக் குறிப்பிட்ட அந்தச் சான்றிதழைத் தன்னிடம் வழங்குமாறு கேட்டுள்ளார்.

அதன்படி இறப்பு சான்றிதழ் அவரிடம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த அந்தப் பெண், பின்னர் தாசில்தார் அலுவலகத்திற்கும் சென்று முறையிட்டுள்ளார். அங்கு, “உங்களுக்கு தேவையானதை செய்து தருகிறோம்” என அதிகாரிகள் சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், “எனக்கு எந்தப் பொருளோ, பணமோ தேவையில்லை. நான் உயிருடன் இருக்கும்போது என்னை இறந்ததாகப் பதிவு செய்தது ஏன் என்பதுதான் எனக்குத் தெரிய வேண்டும். இந்தத் தவறுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தப் பெண் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ள அந்தப் பெண், சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.உயிருடன் இருக்கும் பெண்ணை இறந்துவிட்டதாகப் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள இந்தப் புகார், மதுரையில் அதிகாரிகளின் செயல்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Officials issued death certificate living woman Complaint District Collector


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->