முதல்வர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றும் பணியில் டெண்டர் விதிமீறலா?இ-டெண்டரை பார்த்தவர்களுக்கு ஷாக்! என்னாச்சு?
Were there tender violations in the process of shifting the Chief Minister office to the Namakkal Kavignar Maligai Those who viewed the e tender were shocked! What happened
சென்னை தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தை, அதே வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், டெண்டர் அறிவிப்பில் விதிமீறல்கள் இருப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சுதந்திரத்திற்குப் பிறகு தமிழக அரசின் தலைமைச் செயலகமாக செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக முதலமைச்சர் அலுவலகமும் இதே வளாகத்தில் இயங்கி வருகிறது. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முதல்வர்கள் இந்த அலுவலகத்தில் இருந்தே நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இடப்பற்றாக்குறை மற்றும் நிர்வாக வசதிகளை கருத்தில் கொண்டு முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலமைச்சரின் அறை மட்டுமின்றி, முதன்மைச் செயலர்கள், ஆலோசகர்கள் ஆகியோருக்கான அறைகள் மற்றும் ஆலோசனைக் கூட்ட அரங்குகளும் அங்கு அமைக்கப்பட உள்ளன.
இதற்கான கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள பணிகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளாக்-1 பணிகளுக்கு ரூ.2.41 கோடியும், பிளாக்-2 பணிகளுக்கு ரூ.2.01 கோடியும், பிளாக்-3 பணிகளுக்கு ரூ.1.12 கோடியும் டெண்டர் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நாளிதழ் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 1-ம் தேதி மாலை 3 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையேதான் டெண்டர் அறிவிப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 13-ம் தேதி நாளிதழ்களில் டெண்டர் விளம்பரம் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான இ-டெண்டர் அறிவிப்பு நான்கு நாட்கள் கழித்து, 17-ம் தேதிதான் ஆன்லைனில் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், நாளிதழ் விளம்பரத்தில் ஒவ்வொரு பிளாக்கிற்கும் திட்ட மதிப்பீடு மற்றும் டெண்டர் தொகை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஆன்லைனில் வெளியிடப்பட்ட இ-டெண்டர் அறிவிப்பில் திட்ட மதிப்பீடு தொடர்பான முழுமையான விவரங்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒருபுறம் பிளாக்-1க்கு ரூ.2.41 கோடி, பிளாக்-2க்கு ரூ.2.01 கோடி, பிளாக்-3க்கு ரூ.1.12 கோடி என தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் ஆன்லைன் டெண்டர் ஆவணங்களில் இதற்கான தெளிவான விவரங்கள் இல்லாதது எப்படி என கேள்வி எழுப்பப்படுகிறது.
அத்துடன், டெண்டருக்கு விண்ணப்பிக்க ஒதுக்கப்பட்டுள்ள கால அவகாசமும் மிகவும் குறைவாக இருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளிதழ் மற்றும் இ-டெண்டர் அறிவிப்புகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கால இடைவெளி, திட்ட மதிப்பீடு குறித்த முரண்பாடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
முதல்வர் அலுவலகத்தை மாற்றும் முக்கியமான அரசு பணிக்கான டெண்டரிலேயே இத்தகைய குழப்பங்கள் ஏன் ஏற்பட்டன? விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? என்ற கேள்விகள் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் எழுந்துள்ளன.
English Summary
Were there tender violations in the process of shifting the Chief Minister office to the Namakkal Kavignar Maligai Those who viewed the e tender were shocked! What happened