விசிக மாநாட்டில் வன்னி அரசுவின் கையை தட்டிவிட்ட திருமாவளவன்? மேடையிலேயே முகம் மாறிய வன்னி அரசு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிகவின் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில், கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் அமைச்சர் வன்னி அரசு இணைந்து சுடர் ஒளியை ஏந்தியபோது ஏற்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

உளுந்தூர்பேட்டையில் நேற்று மாலை நடைபெற்ற இந்த மாநாட்டில் திருமாவளவன் தலைமை தாங்கினார். அமைச்சர் வன்னி அரசு உள்ளிட்ட கட்சியின் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் 125 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு வந்த திருமாவளவனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சுமார் 700 மீட்டர் நீளமுள்ள ரேம்ப் வாக்கில் சுடர் ஒளியை ஏந்தியபடி அவர் சென்றார். பின்னர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அப்போது திருமாவளவன் கையில் சுடர் ஒளியை ஏந்தியிருந்த நிலையில், அவருக்கு அருகில் நின்ற அமைச்சர் வன்னி அரசும் அவரது கையைப் பிடித்தபடி சுடர் ஒளியை இணைந்து ஏந்தியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு வன்னி அரசு வைத்திருந்த கையை திருமாவளவன் தட்டிவிட்டதாகவும், அதன் பின்னர் அவர் மட்டும் சுடர் ஒளியை ஏந்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனால் திருமாவளவனின் இந்த செயல் திட்டமிட்டதா அல்லது நிகழ்வின்போது இயல்பாக நடந்ததா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக, அமைச்சர் பதவியேற்ற பிறகு வன்னி அரசின் செயல்பாடுகள் கவனம் பெற்றுவரும் சூழலில் இந்த சம்பவம் கூடுதல் பேசுபொருளாகியுள்ளது.

மாநாட்டில் கூட்டம் அதிகமாக இருந்ததால், திருமாவளவன் ரேம்ப் வாக்கில் சென்றபோதும் தொண்டர்கள் அவரை நெருங்கியபடி சென்றனர். சிலர் ரேம்ப் மீது ஏறியதால் விசிக தொண்டரணி மற்றும் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் அவர்களை கட்டுப்படுத்தினர். சிலரை கீழே இறக்குவதற்காக பவுன்சர்கள் தள்ளிவிட்ட சம்பவமும் நடந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் மாநாட்டு மேடையிலும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டதால் திருமாவளவனால் அமைதியாக உரையாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. தொண்டர்களுக்கு நடுவே நின்றபடியே அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய திருமாவளவன், விசிகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து பயணிக்கும் என்று தெரிவித்தார். “விசிக தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி என்பதை இந்த மாநாடு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இனி வரும் காலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் ஆளும் கட்சியாக வளர வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “முதல்வர் ஜோசப் விஜய், அன்புச் சகோதரர் விஜய்யுடன் நாம் கூட்டணி வைத்திருக்கிறோம். விசிகவும் தவெகவும் இனி தமிழக அரசியல் களத்தில் இணைந்தே பயணிக்கும்” என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

இதனால், ஒருபுறம் திருமாவளவன்–வன்னி அரசு இடையிலான சுடர் ஒளி சம்பவம் வைரலாகி வரும் நிலையில், மறுபுறம் தவெகவுடனான கூட்டணி குறித்து திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்திருப்பதும் தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did Thirumavalavan swat away Vanni Arasu hand at the VCK conference Vanni Arasu expression changed right there on stage


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...


செய்திகள்



Seithipunal
--> -->