ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம்!
Revenue settlement at the Andipatti taluk office
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் ரஜத் பீடன் கலந்து கொண்டு மனுக்களை பெற்றார் .
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு துணை ஆட்சியர் ரஜத் பீடன் தலைமை தாங்கினார். தாசில்தார்கள் ஜாகிர் உசேன் ,இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஜமாபந்தி நேற்று 22ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி வரும் 29ஆம் தேதி வியாழக்கிழமை உடன் முடிவடைகிறது. ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள 18 வருவாய் கிராமங்களுக்கு இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று கோவில்பட்டி ,சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட் 1, பிட் 2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது .
மேலும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை புலிமான் கோம்பை ,திம்மரச நாயக்கனூர் பிட் 1, பிட் 2 ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 27 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மொட்டனூத்து, ஜீ. உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 28ஆம் தேதி புதன்கிழமை கோத்த லூத்து, கொத்தபட்டி, ராஜதானி, பழைய கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, சித்தார் பட்டி ,கணவாய் பட்டி உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கும், 29ஆம் தேதி வியாழக்கிழமை கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ,மேகமலை வருவாய் கிராமங்களுக்கும் இந்த தீர்வாய நிகழ்ச்சி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டு மனை பட்டாக்கள், இலவச வீட்டு மனை பட்டாக்கள், பிறப்பு - இறப்பு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்க கோரி மனுக்களை அளித்தனர். மேலும் தீர்வு பெற்ற மனுக்களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த ஜமாபந்தி நிகழ்வில் வருவாய் அலுவலர்கள், வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Revenue settlement at the Andipatti taluk office