இஸ்ரேலில் மக்கள் போராட்டம்..பணய கைதிகளை விடுவிக்க வலியுறுத்தல்!
Protests in Israel Demand for the release of hostages
50 பணய கைதிகளை உயிருடனோ அல்லது அவர்களின் உடல்களையோ திரும்ப கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி இஸ்ரேலில் மக்கள் கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் , நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. ஆயிரக்கணக்கானோரை படுகொலை செய்தது.இதற்கு பதிலடியாக, காசாவை இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், காசா பகுதியில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் . 1 லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், பணய கைதிகளில் சிலரை இஸ்ரேல் மீட்டது.முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1-ந்தேதியுடன் முடிவடைந்தநிலையில் 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.
இந்த சூழலில், காசாவில் சிறை பிடித்து வைக்கப்பட்டு உள்ள பணய கைதிகளில் 10 பேர் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என டிரம்ப் கூறினார். மேலும் 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு டிரம்பும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்காக கடந்த 6-ந்தேதி முதல், தோஹாவில் பேச்சுவார்த்தைக்கான முயற்சி நடந்து வருகிறது. எனினும், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் , 50 பணய கைதிகளை உயிருடனோ அல்லது அவர்களின் உடல்களையோ திரும்ப கொண்டு வரவேண்டும் என்றும், போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு விரிவான ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோரி இஸ்ரேலில் மக்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கைகளில் இஸ்ரேல் கொடிகளை ஏந்தியபடியும், பேனர்களையும் ஏந்தியபடியும், ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
English Summary
Protests in Israel Demand for the release of hostages