இரவோடு இரவாக சந்தன மரங்களை வெட்டி கடத்திய மர்ம கும்பல்: போலீசார் வலைவீச்சு..!
Police are investigating a gang that cut down and smuggled sandalwood trees from a park in Coimbatore
கோவை காந்திமாநகர் மாநகராட்சி பூங்காவில் இருந்த நான்கு சந்தன மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி சென்றுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர் பகுதியில் பொது இடங்கள், வீடுகள், பூங்காக்கள், காலியிடங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் சந்தன மரங்கள் உள்ளன. அத்தோடு, மாநகரின் மத்திய பகுதியான ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், வன அலுவலர் குடியிருப்பு, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம், காவல் துறை ஆணையர் போன்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வசிக்கும் குடியிருப்புகளும் உள்ளன.
அனால், கடந்த சில மாதங்களாக இந்த பகுதிகளில் உள்ள சந்தன மரங்களை மர்ம கும்பல் தொடர்ந்து வெட்டி கடத்தி சென்றுள்ளார். இதனை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால், தற்போது அந்த பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் வீடுகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் உள்ள சந்தன மரங்களை தற்போது வெட்டி கடத்தி செல்கின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில், நேற்றிரவு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த நான்கு சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். இதில், சில மரங்களை பாதியாக வெட்டியுள்ளனர். இன்று காலையில் வாக்கிங் சென்ற அப்பகுதியை சேர்ந்தவர்கள் பூங்காவில் சந்தன மரங்கள் பாதியாக வெட்டி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்தன மரம் வெட்டி கடத்திய மர்ம கும்பல் குறித்து விசாரித்து வருகின்றனர். இது தொடர்பில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
Police are investigating a gang that cut down and smuggled sandalwood trees from a park in Coimbatore