CBI என மிரட்டி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ ...! - திருநெல்வேலியில் சைபர் மோசடி வலை உடைப்பு...!
Threatening CBI they carried digital arrest Cyber fraud network busted Tirunelveli
திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்தில் நடந்த ஒரு அதிர்ச்சி அளிக்கும் சைபர் மோசடி சம்பவம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சில மர்ம நபர்கள், “நாங்கள் சி.பி.ஐ.யிலிருந்து பேசுகிறோம்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரது ஆதார் எண் மற்றும் மொபைல் எண் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றம் என்றும் கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

மேலும், விசாரணை நடைபெறும் வரை அவர் தொடர்ந்து வீடியோ கால் மூலம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கூறி ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் அவரை மனதளவில் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.இந்தப் பேச்சுகளை உண்மை என நம்பிய அந்த நபர், சட்டவிரோத பண பரிவர்த்தனைகளை சரிபார்ப்பதாக கூறிய மோசடியாளர்களின் அறிவுறுத்தலின்படி, தனது வங்கி சேமிப்பு தொகையை அவர்கள் தெரிவித்த கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின்னரும் அவரை தொடர்ந்து டிஜிட்டல் அரெஸ்ட் செய்து மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், பாதிக்கப்பட்ட நபர் அனுப்பிய பணம் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் என்பவரின் வங்கி கணக்குக்கு சென்றது என்பது தெரியவந்தது.ஹென்றி ஜோன்ஸை பிடித்து விசாரித்ததில், அவர் வெறும் ரூ.5,000 பெற்றுக்கொண்டு வங்கி கணக்கைத் தொடங்கி, அதை மற்றொரு நபருக்கு வாடகைக்கு விற்றது அம்பலமாகியுள்ளது.
இதனையடுத்து, பணம் பெற்றுக்கொண்டு வங்கி கணக்கை சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்த அனுமதித்ததற்காக, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும் வங்கி கணக்கை தொடங்கி கொடுப்பது அல்லது வாங்குவது கடுமையான குற்றம் என்றும்,‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்று என்றும்,திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு தெளிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேலும், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொள்ளவோ cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிக்கவோலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒரு நிமிட கவனக்குறைவு… வாழ்நாள் சிக்கலாக மாறலாம் சைபர் மோசடியில் எச்சரிக்கையுடன் இருங்கள்!
English Summary
Threatening CBI they carried digital arrest Cyber fraud network busted Tirunelveli