பொங்கல் திரையரங்குகளில் ‘பராசக்தி’ அதிரடி! - தணிக்கை தடையை தாண்டி வெளியீட்டுக்கு தயாரான சிவகார்த்திகேயன் படம்
Parasakthi creates sensation Pongal theaters Sivakarthikeyan film ready release after overcoming censorship hurdles
2026 புத்தாண்டின் முதல் பெரும் திரை பண்டிகையான பொங்கலை குறிவைத்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் பிரதான கதாநாயகனாக நடித்திருந்தாலும், ஜெயம் ரவி மற்றும் அதர்வா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவதால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தில் உள்ளது.

1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அரசியல்–வரலாற்றுப் பின்னணியுள்ள திரைப்படம், நாளை (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால், வெளியீட்டுக்கு முன், ‘ஜனநாயகன்’ படத்தைப் போலவே ‘பராசக்தி’ படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் இழுபறி ஏற்பட்டது. சில காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் பரிந்துரை செய்ததை எதிர்த்து, படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையின் முடிவில், நீதிமன்ற உத்தரவின் பேரில், தணிக்கை வாரியம் ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. நாளை படம் வெளியாக உள்ள நிலையில், இன்று (ஜன.9) தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது.
2 மணி 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ள இந்த படம், பொங்கல் திருவிழாவுக்கு அரசியல் நெருப்பூட்டும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், ‘பராசக்தி’ படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் ‘பராசக்தி’ அரசியல் அதிர்வை ஏற்படுத்துமா? – ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Parasakthi creates sensation Pongal theaters Sivakarthikeyan film ready release after overcoming censorship hurdles