கடலூரில் பா.ம.க.வினர் கைது! அமைச்சர் நடத்திய கூட்டத்தில் சலசலப்பு!
PMK members arrested who protest against NLC land grabbing in Sethiathoppu
என் எல் சி நிறுவனத்திற்காக விவசாய நிலத்தை கைப்பற்ற, அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ரகசிய ஆலோசனை கூட்டத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க சென்ற பாமகவினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என் எல் சி பழுப்பு நிலக்கரி சுரங்கத்திற்கு விவசாய நிலங்களை கைப்பற்றுவதற்கான அவசர கூட்டத்தை, இன்று கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகில் உள்ள பூதங்குடியில், தமிழக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நடத்தியுள்ளனர்.

புதிய நிலக்கரி சுரங்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகவல் அளிக்காமல், இரகசியமாக இக்கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அப்பகுதியைச் சேர்ந்த பாமகவினர் நேரில் மனுகொடுக்க சென்றதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அங்கே முழக்கம் எழுப்பிய பாமகவினர் கைது செய்யப்பட்டு, சேத்தியாத்தோப்பு தீப்பாய்ந்த அம்மன் கோவில் அருகே உள்ளே திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். அமைச்சர் நடத்திய ரகசிய கூட்டத்திற்கு எதிராக பாமகவினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

என் எல் சி நிறுவனத்திற்காக விவசாய நிலத்தை கைப்பற்றும் முயற்சியை விட்டுவிட்டு, நிறுவனமே மாவட்டத்தை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், நிலங்களை கைப்பற்றி நிறுவனத்திற்கு ஒப்படைப்பதில் அமைச்சரும் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
PMK members arrested who protest against NLC land grabbing in Sethiathoppu