ஹமாஸ் பிடியில் இருக்கும் ஒரேயொரு ஹிந்து மாணவன்: விடுதலை செய்யப்படுவாரா..? குடும்பத்தினர் ஏக்கம்..!
Will the only Hindu youth held by Hamas be released
கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 07ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். அதில் பல வெளிநாட்டினரும் அடக்கம். அவர்களில் நேபாளத்தை சேர்ந்த பிபின் ஜோஷி என்ற 23 வயதுடைய ஒரே ஒரு ஹிந்து மத இளைஞரும் அடங்குகிறார்.
நேபாளத்தை சேர்ந்த அவர் விவசாய பயிற்சிக்காக சென்ற போது சிக்கிக் கொண்ட அவர், விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேபாளத்தை சேர்ந்த மாணவர் குழுவுடன் இணைந்து பிபின் ஜோஷி இஸ்ரேல் சென்று இருந்தார். அப்போது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய அன்று அவர் உயிரிழந்திருக்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், அவர் சமயோசிதமாக செயல்பட்டதால் உயிர் தப்பியதுடன் தனது நாட்டைச் சேர்ந்த இளைஞர்களை காப்பாற்றியுள்ளதோடு, பல இஸ்ரேலியர்களின் உயிரையும் பாதுகாத்துள்ளார்.

ஆனாலும், அவர் ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் சிக்கிக் கொண்டார். எப்படியும் பயங்கரவாதிகளிடம் பிடிபடுவோம் என தெரிந்த உடன் உடனடியாக உறவினர்களுக்கு மொபைல்போனில் குறுஞ்செய்திகளை அனுப்பினார். அதில், ' தனக்கு ஏதாவது ஆனால், தனது பெற்றோரை பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவித்து இருந்தார்.இதனால், அவரது பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர்.
இதனையடுத்து, அவரை எப்படியாவது மீட்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதற்கு முன்னர் போர் நிறுத்தம் ஏற்பட்ட போது, பல பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். ஆனால், இன்னும் 47 பேர் பிணைக்கைதிகளாக உள்ளனர். அவர்களில் பிபின் ஜோஷி இல்லை. அவர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனால், அவர் உயிரிழந்து இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் டிரம்ப்பின் முயற்சி காரணமாக இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், காசாவில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. வரும் அடுத்த 72 மணி நேரத்துக்குள் பிணைக்கைதிகள் விடுதலையை ஹமாஸ் அமைப்பினர் உறுதி செய்ய வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.
இதனையடுத்து, பிணைக்கைதிகள் குறித்த வீடியோ ஒன்றை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். அதில் பிபின் ஜோஷியும் உள்ளார். அந்த வீடியோவை பார்த்த பெற்றோரும் மகனை உறுதி செய்துள்ளனர்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: '' எனது பெயர் பிபின் ஜோஷி. நான் நேபாளத்தை சேர்ந்தவன். 23 வயதாகிறது. படித்து சம்பாதிக்கும் என்ற திட்டத்துக்காக இங்கு வந்தேன் . நான் மாணவன்'' எனக்கூறியுள்ளார். இந்நிலையில், பிபின் ஜோஷி விரைவில் விடுதலை செய்யப்படுவார் என அவரது குடும்பத்தினரின் நம்பிக்கையாக உள்ளது.
English Summary
Will the only Hindu youth held by Hamas be released