'ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல': இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு எச்சரித்த விடுத்த தலிபான் அமைச்சர்..!
Afghan minister warns Pakistan from India
ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உரையாடியுள்ளார்.
அதனை தொடர்ந்து டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய போது கூறியதாவது: இது எனது முதல் இந்தியப் பயணம். ஆப்கானிஸ்தானில் இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் திறக்கவிருக்கிறதாகவும், இந்தியாவில் ஆப்கான் தூதரகத்தை விரைவில் திறக்கவுள்ளதாகவும், இந்தியா - ஆப்கன் உறவுகள் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான ஆட்சியில் பெண்களின் உரிமைகள் குறித்து அவர் பேசுகையில்; 2021க்கு ஆகஸ்ட் 15 முன்பு ஒவ்வொரு நாளும் 200 முதல் 400 பேர் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது அந்த நிலை இல்லை. இப்போது அமைதி நிலவுகிறது. பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். அனைவரது உரிமையும் பாதுகாப்பாக இருக்கிறது. பெண்கள் உரிமை பிரசாரம் செய்பவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று அறிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு நாட்டிற்கும், அதன் சொந்த பாரம்பரியங்களும், கொள்கைகளும் உள்ளன என்றும், அதன்படிதான் அந்த நாடு செயல்படும் எனவும், அதற்காக, நாங்கள் உரிமைகளை நிராகரிக்கிறோம் என்று ஆகிவிடாது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், எங்கள் ஆட்சியின் கீழ் மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால், எப்படி அமைதி நிலவ முடியும் என்றும், இந்த அமைதியை அமெரிக்காவோ அல்லது வேறு யாரோ கொண்டு வந்தது கிடையாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவர் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: 'நான் இதைச் சொல்ல வேண்டும். ஆப்கானிஸ்தானின் மக்கள் வெளிநாட்டு ராணுவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. யாராவது எங்கள் நாட்டுடன் உறவு வைத்திருக்க விரும்பினால், அவர்கள் ராஜதந்திர கொள்கையின் மூலம் அணுகலாம். ஆனால் ராணுவத்தின் மூலம் முடியாது.' என்று திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆப்கானியர்களின் தைரியத்தை சோதித்து பார்க்கக் கூடாது என்றும், யாராவது இதைச் செய்ய விரும்பினால், சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கேட்க வேண்டும் எனவும், ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல என்பதை அவர்களால் சொல்ல முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், எல்லைக்கு அருகே உள்ள கிராமப் பகுதிகளில் ஒரு தாக்குதல் நடந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த செயல் தவறானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முறையில் பிரச்சனைகளை தீர்க்க முடியாது எனவும், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் கதவை திறந்தே வைத்திருக்கிறோம் என்றும், அவர்களின் உள்நாட்டு பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும், முன்னேற்றமும் நிலவுகின்றதாகவும், இதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இருக்கக் கூடாது என்றும், நாங்கள் ஒரு சுதந்திர தேசம். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் சிறந்த உறவுகளை நாங்கள் விரும்புகிறோம் என்று ஆப்கன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர் கான் முட்டாகி தெரிவித்துள்ளார்.
English Summary
Afghan minister warns Pakistan from India