ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த 2010-ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகளில் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஓராண்டு முடிவடைந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஒரே ஒரு தகுதித் தேர்வின் முடிவுகள் கூட வெளியிடப்படவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசிடம் ஆயிரம் வழிகள் இருக்கும் போதும், அவற்றை இதுவரை பயன்படுத்தாதது ஏமாற்றமளிக்கிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அடுத்த இரு ஆண்டுக்குள், அதாவது 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் பணி நீக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. பின்னர் இக்காலக்கெடு மேலும் ஓராண்டு, அதாவது 31.08.2028 வரை நீட்டிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தமிழ்நாட்டில் 4 லட்சம் ஆசிரியர்கள் வேலை இழக்கும் நிலை உருவானது. ஓய்வு பெறுவதற்கு ஐந்தாண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதால், 3 லட்சத்து 28,701 பேர் அடுத்த 3 ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதனால், பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வுகளை எளிய முறையில் நடத்தி, அவர்களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியான நாளிலேயே நான் வலியுறுத்தினேன். ஆனால், அதை செய்யாத அப்போதைய திமுக அரசு, அதன்பின் 6 மாதங்கள் கழித்து கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தான் அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு கடந்த ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. ஆனால், தேர்வு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 230 நாள்களும், தேர்வு நடத்தப்பட்டு 89 நாள்களும் நிறைவடைந்து விட்ட நிலையில், அதன் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், ஆசிரியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருப்பது தான் முடிவுகள் வெளியிடப்படாததற்கு காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், உயர்நீதிமன்றத்தில் எப்போதோ முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வழக்கு தாமதமாவதற்கு காரணமே அரசின் அலட்சியம் தான். ஆசிரியர் தகுதித் தேர்வில் பொதுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இது குறித்து பரிசீலிக்க கால அவகாசம் தேவை என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அரசின் முடிவை ஜூலை 24-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தது.

தமிழக அரசு நினைத்திருந்தால், ஜூலை 24-ஆம் தேதிக்குள் அதன் நிலைப்பாட்டை தெரிவித்து, இடைக்கால தடையை நீக்கச் செய்திருக்க முடியும். ஆனால், ஒரு மாதம் தாமதமாக ஆகஸ்ட் 25-ஆம் தேதி தான் பதில் மனு தாக்கல் செய்தது. பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க முடியாது என்று கூறிய தமிழக அரசு, முடிவுகளை வெளியிடுவதற்கான தடையை நீக்கும்படி மனுவில் கோரியிருந்தது. ஆனால், அதன் பின் ஒரு மாதத்திற்கு மேலாகி விட்ட நிலையில், வழக்கை மீண்டும் விசாரணைக்கு கொண்டு வந்து, தடையை நீக்கவும், தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் கால தாமதமும் பணியில் உள்ள ஆசிரியர்களின் மன உளைச்சலை அதிகரிக்கவே செய்யும். அவர்கள் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெறுவதற்கு உச்சநீதிமன்றம் மொத்தம் 3 ஆண்டுகள் அவகாசம் கொடுத்திருந்தது. அதில் ஓராண்டும், ஒரு மாதமும் முடிவடைந்து விட்ட நிலையில், இப்போது வரை ஒரே ஒரு தகுதித் தேர்வின் முடிவுகள் கூட வெளியிடப் படவில்லை. மீதமுள்ள 23 மாதங்களில் இன்னும் எத்தனை தகுதித் தேர்வுகள் நடத்தப்படும் என்பது தெரியவில்லை.

தகுதித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட போதே ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 14 ஆண்டுகளில் அதை தமிழக அரசு பின்பற்றவில்லை. 3.28 லட்சம் ஆசிரியர்களின் பணிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும் காலத்திலும் கூட, அதே அலட்சியமான அணுகுமுறையைத் தான் அரசு கடைபிடித்து வருகிறது. ஆண்டுக்கு இரு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டால், 3 ஆண்டுகளில் மொத்தம் 6 முறை தகுதித் தேர்வு எழுதும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால், 13 மாதங்களில் ஒரே ஒரு தகுதித் தேர்வு தான் நடத்தப்பட்டு, அதன் முடிவு கூட இன்னும் வெளியிடப்படாத நிலையில், மீதமுள்ள காலத்தில் 1 அல்லது 2 தகுதித் தேர்வுகளை மட்டுமே நடத்த முடியும். அப்படியானால், ஆசிரியர்களிடமிருந்து 3 அல்லது 4 தகுதித் தேர்வு எழுதும் வாய்ப்புகள் பறிக்கப்படும். இது சரி செய்ய முடியாத சமூக அநீதியாகும்.

பணியில் உள்ள ஆசிரியர்கள் முன்வைக்கும் மற்றொரு கோரிக்கை தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்பதாகும். பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை விதிகளின்படி குறைக்க முடியாது என்றாலும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை 150-க்கு 52 (35%) ஆக தமிழக அரசு குறைத்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் கடந்த ஜூலை மாதம் இந்தத் தேர்வை எழுதிய 2 லட்சத்து 20,464 பேரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். ஆசிரியர்களின் பணியை பாதுகாப்பதற்காக, தகுதித் தேர்விலிருந்து அவர்களுக்கு விலக்களித்து கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய தவெக அரசு, அதன் அதிகார வரம்புக்குள் இருக்கும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்கும் அரசாணையை பிறப்பிக்கத் தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.

ஆசிரியர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்தால் அவர்களால் சிறப்பாக கற்பிக்க முடியாது. எனவே, அவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 50-க்கு 52 (35%) ஆக தமிழக அரசு குறைக்க வேண்டும்; அதனடிப்படையிலான தேர்வு முடிவை உடனடியாக வெளியிட வேண்டும். 2028 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இரு சிறப்புத் தேர்வுகள் உள்பட மேலும் 5 முறை ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss tvk govt tet exam


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->