ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது - அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin teachers protest
ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதால், உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் இன்று இரண்டாவது நாளாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தீர்வு காண தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் , தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவோம் என்பன உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, ஆசிரியர்களின் பதவி உயர்வில் மாநில அளவில் முன்னுரிமை என்ற 243-ஆம் எண் அரசாணையை பிறப்பித்து ஆசிரியர்களுக்கு துரோகம் செய்தது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க கடந்த ஆட்சியில் குழு அமைத்து அறிக்கை பெறப்பட்டு விட்ட நிலையில் புதிய குழுவை அமைத்து திமுக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும்; பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் மக்கள் நல அரசின் அடிப்படைக் கடமைகளாகும். ஆனால், இவை இரண்டையுமே செய்யாமல் யாருக்காக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்பது தெரியவில்லை. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே இந்தக் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவற்றை பரிசீலிப்பதற்குக் கூட அரசு முன்வரவில்லை.
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் நிதிப் பற்றாக்குறை என்ற பழைய பல்லவியையே பாடி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கக்கூடாது. தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோஜேக் அமைப்பின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin teachers protest