உலக நாடுகளை முந்தியது நம்ம சென்னை...! - சர்வதேச சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வென்று சென்னை மெட்ரோ சாதனை...!
Our Chennai surpassed countries world Chennai Metro achieves feat by winning International Environmental Leadership Award
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், உலக அரங்கில் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை உயர்த்திப் பேசும் வகையில் மிகப்பெரிய கவுரவத்தை தட்டிச்சென்றுள்ளது. ‘ஜீஈஈஎப் உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு விருதுகள் 2026’ விழாவில், “2026 ஆம் ஆண்டின் சிறந்த உலகளாவிய சுற்றுச்சூழல் தலைமைத்துவ திட்டம்” என்ற உயரிய விருது சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையின் மெட்ரோ ரெயில் பிரிவில் வழங்கப்படும் இந்த சர்வதேச அங்கீகாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நகர வளர்ச்சியில் சென்னை மெட்ரோ மேற்கொண்ட முன்னோடியான முயற்சிகளுக்காக வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பெருமைக்குரிய விருது வழங்கும் விழா, வரும் மே 22-ஆம் தேதி புதுடெல்லியில் நடைபெறவுள்ள உலகளாவிய எரிசக்தித் தலைவர்கள் உச்சி மாநாட்டில் நடைபெற உள்ளது.
சென்னை மெட்ரோ திட்டத்தின் திட்டமிடல் தொடங்கி கட்டுமானம் மற்றும் தினசரி இயக்கம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் இயற்கை பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைத்து செயல்பட்ட விதமே இந்த விருதிற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் வளமிக்க பகுதிகளை பாதுகாக்கும் நோக்கில் வழித்தடங்களில் மாற்றங்கள் செய்ததிலிருந்து, நிலையங்கள் மற்றும் உயர்மட்டப் பாதைகளில் பசுமை வடிவமைப்பு அம்சங்களை உருவாக்கியது வரை பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஈடுசெய்யும் மரக்கன்றுகள் நடுதல் திட்டங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே மர அடர்த்தியை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ குறிப்பிடத்தக்க சாதனையை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பருவநிலை மாற்ற சவால்களுக்கு மத்தியில், நகர வளர்ச்சியும் இயற்கை பாதுகாப்பும் இணைந்து பயணிக்க முடியும் என்பதை சென்னை மெட்ரோ உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டுகின்றனர்.
இந்த உலகளாவிய கவுரவம், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை உருவாக்கும் சென்னை மெட்ரோவின் தொலைநோக்குப் பார்வையையும், பசுமை நிறைந்த வலிமையான சென்னையை உருவாக்கும் அதன் அர்ப்பணிப்பையும் மேலும் உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Our Chennai surpassed countries world Chennai Metro achieves feat by winning International Environmental Leadership Award