சளிக்கு நாய்க்கடி ஊசி போட்ட செவிலியர்.. கடலூர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!
Nurse gave dog bite injection for cold in cuddalore govt hospital
கடலூர் மாவட்டம் கோதண்டராமாபுரத்தை சேர்ந்த கருணாகரன் என்பவரின் மூத்த மகளான சாதனாவை (வயது 13) கடந்த 27ம் தேதி சளி மற்றும் காய்ச்சல் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது சாதனாவுக்கு கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் 2 ஊசிகள் போட்டனர். எதற்கு 2 ஊசி போடுகிறீர்கள் என கருணாகரன் கேட்க செவிலியர்கள் நாய் கடிக்கு 2 ஊசி தான் போடுவார்கள் என கூறியுள்ளார்

இதனால் அதிர்ச்சி அடைந்த கருணாகரன் சளிக்கு ஏன் நாய்க்கடி ஊசி போட்டீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு அரசு மருத்துவமனை செவிலியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வீடு திரும்பிய சாதனாவிற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன கருணாகரன் மீண்டும் கடலூர் அரசு மருத்துவமனையில் தனது மகளை அனுமதித்துள்ளார்.
மேலும் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் தனது மகளுக்கு அலட்சியமாக சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை செவிலியர்கள், பணியில் இருந்த மருத்துவர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் சளி மற்றும் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் தொடர்ந்து இதுபோன்று அலட்சிய போக்கு நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு மருத்துவமனைகளை உரிய முறையில் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Nurse gave dog bite injection for cold in cuddalore govt hospital