நீட் தேர்வு ரத்து மற்றும் மறுதேர்வு பயம்: நாடு முழுவதும் 4 மாணவர்கள் தற்கொலை... நெஞ்சைப் பதறவைக்கும் தற்கொலை கடிதங்கள்!
NEET UG Cancellation and Re exam Anxiety Tragic Suicides of 4 Students Across India Spark Nationwide Shock
முறைகேடு புகார்களால் நீட் யுஜி நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால் ஏற்பட்ட கடுமையான தேர்வு பயம், குழப்பம் மற்றும் மன அழுத்தம் காரணமாகத் தமிழகம், டெல்லி, உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த நான்கு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் கோயம்புத்தூர் கோவைபுதூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி அனுகீர்த்தனா, மருத்துவராகும் லட்சியத்துடன் நீட் பயிற்சி பெற்று வந்தார். தேர்வு ரத்தானதால் மீண்டும் எழுத பயமாக இருப்பதாகத் தன் தந்தையின் மொபைலுக்கும் உறவினர்களுக்கும் உருக்கமான வாட்ஸ்அப் செய்தி அனுப்பிவிட்டு ஜூன் 17 அன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். தந்தை தனக்காக நிறைய பணம் செலவழித்த நிலையில் அவர் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று வேதனையுடன் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் குடும்பத்துடன் தங்கிப் படித்து வந்த 22 வயது மாணவர் உமேஷ் மாலி, போட்டித் தேர்வுகளின் கடுமையான மன அழுத்தம் காரணமாக ஜூன் 15 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பு இரண்டு முறை தேர்வு எழுதியுள்ள அவர், ஜூன் 21 அன்று நடக்கவிருக்கும் தனது மூன்றாவது முயற்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார்.
டெல்லி பாலம் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி ரேணு, கடந்த மே 3 அன்று நீட் தேர்வை எழுதியிருந்தார். தேர்வு ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானதில் இருந்து கடும் அழுத்தத்தில் இருந்த ரேணு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாததற்கு மன்னிப்புக் கோரி அவர் கடிதம் எழுதியுள்ளார். மேலும், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த 23 வயது மாணவி ரியா, பன்னிரண்டாம் வகுப்பில் 96.7 சதவீத மதிப்பெண்கள் பெற்றுத் தனது கல்லூரியிலும் டாப்பராகத் திகழ்ந்தவர். படிப்பில் நினைத்த வெற்றியைப் பெற முடியாத ஏமாற்றத்தால் ஜூன் 16 அன்று அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் தொடர் மரணங்கள் போட்டித் தேர்வுகளும், தேர்வு ரத்து போன்ற நிர்வாகக் குறைபாடுகளும் மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் கடுமையான உளவியல் ரீதியான தாக்கத்தை வெளிச்சம்பட்டுக் காட்டியுள்ளன.
English Summary
NEET UG Cancellation and Re exam Anxiety Tragic Suicides of 4 Students Across India Spark Nationwide Shock