மின்சாரத் தடை சர்ச்சை: "மக்களின் வலியை ஏளனம் செய்யவில்லை" - மன்னிப்புக் கேட்டு நடிகர் மகேந்திரன் விளக்கம்!
Power Cut Controversy Never Mocked People's Pain Actor Mahendran Issues Apology and Clarification Video
தமிழகத்தில் நிலவும் மின்சாரத் தடை குறித்துத் தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு விளக்கம் அளித்து, நடிகர் மகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அளித்த நேர்காணல் ஒன்றில் மின்சாரத் தடை குறித்த கேள்விக்கு பதிலளித்த மகேந்திரன், “இவ்வளவு நாள் மின்சாரத்துடன் ஜாலியாக இருந்தவர்கள், ஒரு ஆறு மாதம் இல்லாமல் இருக்க முடியாதா? அரசை ஏன் எப்போதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்? முதல்வர் விஜய்யைக் கேள்வி கேட்டால் மின்சாரம் வந்துவிடுமா? வேண்டுமென்றால் என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுத்துக்கொள்ளுங்கள்; அனைவரும் சோலார் சிஸ்டம் பயன்படுத்தலாமே” என்று பேசியிருந்தார். பொதுமக்களின் அன்றாடப் பாதிப்பை ஏளனம் செய்வது போல் அமைந்த இவரின் இப்பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அவர் மீது கடுமையான இணையத் தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன.
இதையடுத்து, நிலையை உணர்ந்து நடிகர் மகேந்திரன் வெளியிட்டுள்ள விளக்க வீடியோவில் கூறியிருப்பதாவது:
அரசியல் செய்பவர்களுக்கான கேள்வி: "நான் பொதுமக்களைப் பார்த்துக் தரம் தாழ்த்திக் கேள்வி கேட்கவில்லை. மின்சாரத் தடையை ஒரு ஆயுதமாக வைத்து அரசியல் ஆதாயம் தேட முயலும் சிலரை நோக்கித்தான் அந்தக் கேள்வியைக் கேட்டேன். முதல்வர் விஜய் அண்ணா நிர்வாகத்தைச் சீரமைக்க ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருந்தார். அவர் மீது நான் வைத்துள்ள அளவுகடந்த அன்பின் வெளிப்பாட்டினாலேயே உணர்ச்சிவசப்பட்டு அப்படிப் பேசினேன்."
மேலும், 'சோலார் சிஸ்டம்' என்று தவறாகக் குறிப்பிட்டதற்குத் தனது போதிய படிப்பறிவின்மையே காரணம் என்றும், கொச்சி விமான நிலையம் முழுவதும் சோலார் பவர் மூலம் இயங்குவதைப் பார்த்த ஈர்ப்பிலேயே, மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கும் அது கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் பேசியதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். 'என் வீட்டிலிருந்து மின்சாரம் எடுங்கள்' என்று கூறியது திமிரினால் அல்ல என்றும், தானும் சாதாரண மக்களைப் போல மின்வெட்டால் சிரமப்படுவதால் எழுந்த ஆதங்கமே அது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, "மகேந்திரனுக்குத் திமிர் அதிகம் என்றும், மக்களின் வலியை ஏளனம் செய்கிறான் என்றும் கூறுகிறார்கள். தயவுசெய்து அந்தப் பட்டத்தை எனக்குக் கொடுக்காதீர்கள். இன்று நான் ஒருவேளை உணவு உண்கிறேன் என்றால் அது திரையுலகின் மூலம் இந்தத் தமிழ் மக்கள் எனக்குக் கொடுத்தது. அவர்களை நான் எப்படி அவமதிப்பேன்? என் பேச்சு மக்களின் மனதைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என உருக்கமாகக் கூறி தனது விளக்கத்தை முடித்துள்ளார்.
English Summary
Power Cut Controversy Never Mocked People's Pain Actor Mahendran Issues Apology and Clarification Video