வெள்ளை அறிக்கை என்பது வெறும் புள்ளிவிவரம் அல்ல... தமிழகத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வு என்ன...? - பெ. சண்முகம் கறார் கேள்வி...!
White Paper not just statistics What solution Tamil Nadu financial crisis P Shanmugam question
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை தொடர்பாக பல்வேறு கருத்துகளும் பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, “தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை மீதான வெள்ளை அறிக்கை – பொது நிதி குறித்த ஆய்வு 2021–2026” என்ற தலைப்பில் 211 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இத்தகைய அறிக்கைகள் வெறும் புள்ளிவிவர ஆவணங்களாக இல்லாமல், மக்களிடையே பரந்த அளவிலான விவாதங்களை உருவாக்கி, எதிர்கால பொருளாதார முடிவுகளில் மக்கள் கருத்துகளும் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் எதிர்பார்ப்பாகும்.
“ஒரு நோய்; ஆறு அறிகுறிகள்” என்ற அணுகுமுறையில் மாநில அரசின் கடன் சுமை, வட்டி செலவின உயர்வு, வருவாய் பற்றாக்குறை, மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வீழ்ச்சி, கட்டாய செலவின அதிகரிப்பு மற்றும் மறைமுக நிதிப் பொறுப்புகள் ஆகியவை குறித்து அறிக்கை விரிவாக விவரிக்கிறது.

ஆனால் சவால்கள் மற்றும் நெருக்கடிகள் குறித்து அதிகமாக பேசப்பட்டுள்ள நிலையில், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பான செயல்திட்டங்கள் மிகக் குறைவாக இடம்பெற்றுள்ளன. 211 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் “முன்னோக்கி செல்லும் வழி” என்ற பகுதிக்கு வெறும் இரண்டு பத்திகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது கவலைக்குரியதாகும்.நோயின் அறிகுறிகளை விளக்குவது மட்டுமின்றி, அதற்கான தீர்வுகளையும் முன்வைப்பதே முழுமையான அணுகுமுறையாக அமையும்.
மாநிலத்தின் மொத்த கடன் ரூ.13.18 லட்சம் கோடியை எட்டியிருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும், ஒரு அரசின் கடன் பெறும் நடவடிக்கையை தனிநபரின் செலவினங்களுடன் ஒப்பிட முடியாது.அந்த கடன் எந்த நோக்கத்திற்காக பெறப்படுகிறது, எந்தத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது, அதன் பயன் சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கு சென்றடைகிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாகும்.மேலும், 2026–27 ஆம் ஆண்டில் ரூ.1,52,144 கோடி வரை கூடுதல் கடன் தேவைப்படக்கூடிய சூழல் உருவாகலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மாநில அரசுகளின் கடன் பெறும் வரம்பு, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் என்ற கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு மாநில நிதி ஒழுங்கை பேணுவதற்காக அல்லாமல், மாநிலங்களின் சுயாதீன செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், அதிகாரங்களை மத்திய அளவில் குவிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன.
எனவே, இந்த வெள்ளை அறிக்கை நிதிக் கூட்டாட்சி உரிமைகள் குறித்தும் தெளிவான நிலைப்பாட்டை பதிவு செய்திருக்க வேண்டும்.ஜி.எஸ்.டி. இழப்பீட்டு நிதி வழங்கும் நடைமுறையை 2022-ஆம் ஆண்டுடன் மத்திய அரசு நிறுத்திவிட்டது. அதை நீட்டிக்க மாநிலங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த போதிலும் அவை ஏற்கப்படவில்லை.
அதேபோல், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரி பங்கீடு குறைந்து வருவதும், செஸ் மற்றும் கூடுதல் வரிகளின் பங்கு 2014-ஆம் ஆண்டில் 9.2 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 14.1 சதவீதமாக உயர்ந்திருப்பதும் மாநிலங்களின் வருவாய் உரிமையை பாதித்துள்ளது.இதன் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்பட வேண்டிய பல லட்சம் கோடி ரூபாய் தொகைகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன. இவ்வாறான அம்சங்களை குறிப்பிடாமல் ஒரு மாநிலத்தின் நிதிநிலையை முழுமையாக மதிப்பிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.மொத்த வருவாயில் வட்டி செலவினம் 23 சதவீதமாகவும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் 35 சதவீதமாகவும் இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
அதேசமயம், மூலதன முதலீட்டு செலவினம் வெறும் 11.8 சதவீதமாக இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மக்களின் வருமானத்தை உயர்த்தவும், நீண்டகால பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவும் மூலதன முதலீடுகளை அதிகரிப்பது தவிர்க்க முடியாத தேவையாகும்.வருவாய் பற்றாக்குறை குறித்து பேசும் அறிக்கை, நிதிப் பொறுப்பு சட்டத்தின் இலக்குகளை எட்ட முடியவில்லை என தெரிவிக்கிறது.
ஆனால் நிதிப் பற்றாக்குறை என்பது தானாகவே தீமையான ஒன்று அல்ல. அது எந்த நோக்கத்திற்காக உருவாகிறது என்பதே முக்கியம். அதேநேரத்தில், சாதாரண மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில் வருவாய் மேலாண்மை மேற்கொள்ளப்பட வேண்டும்.வரிக் கசிவுகளை தடுத்து, ஏற்கனவே உள்ள வரி அமைப்புகளை திறம்பட செயல்படுத்துவதன் மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட முடியும் என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தால் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய ரூ.5,000 கோடி நிதி பெறுவதில் சிக்கல் இருப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.இது கைவிடப்பட வேண்டிய விஷயம் அல்ல. மாறாக, மாநில உரிமைக்காக போராடி பெறப்பட வேண்டிய நிதியாகும்.
அதேபோல், அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்ட செலவினங்களை ஈடுகட்ட கடன் வரம்பை உயர்த்துவது மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருப்பதும் மாநில சுயாட்சிக்கு சவாலாகும்.போக்குவரத்துத் துறையில் பணியாளர் செலவினங்கள் ஐந்து ஆண்டுகளில் 43 சதவீதம் உயர்ந்திருந்தாலும், பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் உண்மையான உயர்வு 10 சதவீதம் மட்டுமே என அறிக்கை வெளிப்படுத்துகிறது.
மறுபுறம் எரிபொருள் செலவினங்கள் 185 சதவீதம் உயர்ந்திருப்பது, பெட்ரோலிய விலை நிர்ணயத்தில் பின்பற்றப்படும் கொள்கைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது.மாநில அரசின் கூடுதல் கடன் பெறும் உரிமையை பல்வேறு நிபந்தனைகளுடன் இணைப்பது ஏற்க முடியாத ஒன்றாகும்.நிதிக் கூட்டாட்சி உரிமைகள் பாதிக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் எதிராக தமிழ்நாடு அரசு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
புதிய அரசு மீது மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. பொருளாதார சவால்களுக்கு நீண்டகால தீர்வுகளை தேடுவதோடு, உடனடி மக்கள் நல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.எனவே, தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், இந்த வெள்ளை அறிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் பரந்த அளவில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். பொருளாதார நிபுணர்கள், அரசியல் கட்சிகள், தொழில்துறை அமைப்புகள் மற்றும் சமூக பிரதிநிதிகளின் கருத்துக்களை ஒருங்கிணைத்து மாற்று வளர்ச்சி வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.அதேநேரத்தில், மாநிலத்தின் வருவாய் ஆதாரங்களை வலுப்படுத்தும் புதிய திட்டங்களையும் அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
White Paper not just statistics What solution Tamil Nadu financial crisis P Shanmugam question