"மகன் மனோஜ் இறந்த பிறகு வாழவே விருப்பமில்லை என்றார்" – பாரதிராஜாவின் கடைசி நாட்கள் குறித்து மருத்துவர் சொக்கலிங்கம் உருக்கம்!
He said he had no desire to live after his son Manoj passed away Dr Chokkalingam speaks movingly about Bharathiraja final days
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா, தனது மகன் மனோஜின் மறைவுக்குப் பிறகு கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததோடு, மருந்து மற்றும் உணவுகளை வேண்டுமென்றே தவிர்த்து வாழ்வதற்கான விருப்பத்தை இழந்திருந்தார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சொக்கலிங்கம் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மருத்துவர் சொக்கலிங்கம் கூறியதாவது:பாரதிராஜாவுக்கு நீண்டகாலமாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகக் கூறிய மருத்துவர், அவர் வழக்கமாக உணவு, மருந்து மற்றும் உடல்நல விஷயங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்ததாக தெரிவித்தார்."சிகரெட் பிடிப்பதையும் உடல்நலத்துக்காக விட்டுவிட்டார். ஆனால், மகன் மனோஜின் மறைவு அவரை முற்றிலும் உடைத்துவிட்டது. அதன் பிறகு அவர் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்திவிட்டார். 'என் மகனே போய்விட்டான்; இனி நான் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று என்னிடம் கூறினார்," என மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
மகனை இழந்த துயரத்தால் பாரதிராஜா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அதனால் அவருக்கு பசி குறைவு, தூக்கமின்மை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவர் கூறினார்.
இதன் காரணமாக அவருக்கு அடிக்கடி நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகவும், பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்."சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவார். சில வாரங்கள் அல்லது மாதங்களில் மீண்டும் நுரையீரல் தொற்றால் மருத்துவமனைக்கு வருவார். இப்படியே மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் இடையே இருந்தார்," என்றார்.
மருத்துவர் சொக்கலிங்கம் மேலும் கூறுகையில்,"மகன் போனதால் தானும் வாழ வேண்டாம் என்ற எண்ணம் அவருக்குள் ஆழமாக இருந்தது. உணவு உட்கொள்ளாமல் உடல் மிகவும் மெலிந்துவிட்டது. இந்த முடிவு என்னை மிகவும் பாதித்தது," என்றார்.
பாரதிராஜா எதிர்காலம் குறித்து அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டவர் அல்ல என்றும், அவரிடம் பலமுறை 100-வது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று கூறியபோதும்,"எனக்கு அவ்வளவு நாள் வாழ வேண்டும் என்ற விருப்பமே இல்லை," என்று பதிலளித்ததாக மருத்துவர் நினைவுகூர்ந்தார்.
மருத்துவர் சொக்கலிங்கம் கூறியதாவது:"உடலையும் உயிரையும் தாங்கி நிறுத்துவது மனம்தான். மனம் நேர்மறையாக இருக்கும் வரை மனிதன் வாழ முடியும். எதிர்மறை எண்ணங்கள் ஆட்கொண்டால் அது உடல்நலத்தையும் பாதிக்கும்."
மேலும், ஒரு கட்டத்தில் பாரதிராஜாவிடம்,"நீங்கள் மருந்துகளை நிறுத்திவிட்டு இறந்தால் உங்கள் மகன் திரும்பி வந்துவிடுவாரா?" என்று கேட்டதாகவும், அதற்கு அவர் "வரமாட்டார்" என்று பதிலளித்ததாகவும் கூறினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் இறுதி காலத்தில் ஏற்பட்ட மன வேதனை மற்றும் மகன் இழப்பால் ஏற்பட்ட ஆழமான தாக்கம் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ள இந்த தகவல்கள், திரையுலகினரையும் ரசிகர்களையும் உருக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
He said he had no desire to live after his son Manoj passed away Dr Chokkalingam speaks movingly about Bharathiraja final days