"ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டதாக கூறுவது தவறு" – விளக்கம் அளித்த ஆர்த்தியின் தாய் சுஜாதா விஜயகுமார் - Seithipunal
Seithipunal


சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஜீவனாம்சம் தொடர்பாக வெளியான தகவல்களுக்கு ஆர்த்தியின் தாயும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஆர்த்தி மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டதாகவும், நீதிமன்றம் அதை நிராகரித்து ரூ.3 லட்சம் மட்டுமே வழங்க உத்தரவிட்டதாகவும் வெளியாகும் தகவல்கள் தவறானவை. நீதிமன்ற உத்தரவை தவறாகப் புரிந்துகொண்டு சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "நீதிபதி வழங்கிய தீர்ப்பு சுமார் 10 பக்கங்கள் கொண்டது. அதில் எங்கள் தரப்புக்கு சாதகமான பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாதந்தோறும் ரூ.40 லட்சம் பராமரிப்புத் தொகை கேட்கவில்லை. அது நடைமுறையில் சாத்தியமற்ற தொகை என்பது எங்களுக்கும் தெரியும்" என்று தெரிவித்தார்.

குழந்தைகளின் கல்வி செலவுகள் குறித்து பேசிய சுஜாதா விஜயகுமார், "ஆரவ், ஆர்யன் இருவரும் அமெரிக்கன் பள்ளியில் படிக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.86 லட்சம் வரை பள்ளிக் கட்டணம் செலவாகிறது. அந்தப் பள்ளியில் சேர்த்தது ரவி மோகன்தான். தற்போது அந்தக் கல்விச் செலவையும், குழந்தைகளின் நடனம், கராத்தே உள்ளிட்ட கூடுதல் பயிற்சிகளுக்கான செலவையும் ரவி மோகனே ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

மேலும், "ஆர்த்திக்கு மாதம் ரூ.3 லட்சமும், இரண்டு குழந்தைகளுக்கும் தலா ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளின் பராமரிப்பிற்காக எந்த உதவியும் கிடைக்கவில்லை. வீட்டு கடன் தவணைகள் செலுத்தப்படாததால் ஜப்தி நிலையும் ஏற்பட்டது. இந்த அனைத்து செலவுகளையும் சேர்த்தே ரூ.40 லட்சம் என்ற தொகை குறிப்பிடப்பட்டது" என்று விளக்கமளித்தார்.

குழந்தைகளை சந்திப்பது தொடர்பாக அவர் கூறுகையில், "ரவி மோகன் குழந்தைகளை சந்திக்க நாங்கள் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. குழந்தைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகளை ரவி மோகன் சந்திக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது" என்றார்.

தனது குடும்பம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கும் பதிலளித்த சுஜாதா விஜயகுமார், "எந்த தாயும் தனது மகளின் குடும்ப வாழ்க்கை சீர்குலைய வேண்டும் என்று விரும்ப மாட்டார். மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தோம். என் மகளை என்னுடன் வைத்துக்கொள்வதற்காக நான் இப்படி செய்வதாக கூறுவது முற்றிலும் தவறானது. யாருடைய சொத்தையும் அபகரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும், "2007-ஆம் ஆண்டு 'வீராப்பு' திரைப்படம் மூலம் என்னை தயாரிப்பாளராக அறிமுகப்படுத்தியது என் தம்பி சுந்தர் சி. தான்; ரவி மோகன் அல்ல" என்றும் சுஜாதா விஜயகுமார் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Claiming that Rs 40 lakh alimony was demanded is incorrect Aarthi mother Sujatha Vijayakumar clarifies


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->