சர்வதேச அரங்கில் புதிய பரபரப்பு...! “ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல!” – அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு...!
New excitement international arena deal Iran is not final US President Trump makes dramatic announcement
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்ததைத் தொடர்ந்து, ஈரானும் கடுமையான பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்றம் உச்சத்தை எட்டியதுடன், பல மாதங்களாக நீடித்த மோதல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.
இந்த போர்சூழல் காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வுகள் ஏற்பட்டன. எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து, உலக பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் தூதரக முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டன.

பல கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் நடுநிலை முயற்சிகளுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு இடையே முக்கியமான புரிந்துணர்வு ஏற்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் அடிப்படையில், லெபனான் உள்ளிட்ட மோதல் பகுதிகளில் நடைபெற்று வந்த ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கையில் வருகிற 19-ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கையெழுத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் கடந்த மூன்றரை மாதங்களாக நீடித்த பதற்றமான மோதலுக்கு முடிவுகட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் உருவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடிக்கு தீர்வு காணும் முக்கிய முன்னேற்றமாக இந்த உடன்படிக்கை கருதப்படுகிறது.இந்நிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்தாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டின் போது எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அமெரிக்கா–ஈரான் இடையேயான புரிந்துணர்வு இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை என்று தெரிவித்தார்.இதுகுறித்து டிரம்ப் பேசியபோது, “இது முழுமையான இறுதி ஒப்பந்தம் அல்ல.
தற்போது எட்டப்பட்டிருப்பது ஒரு புரிந்துணர்வு ஏற்பாடு மட்டுமே. அதன் விதிமுறைகள் எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லாவிட்டால், மீண்டும் ராணுவ நடவடிக்கைகள் தொடங்கப்படும். ஒப்பந்த நிபந்தனைகள் பின்பற்றப்படாத சூழல் ஏற்பட்டாலும், அல்லது அது அமெரிக்க நலன்களுக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், தாக்குதல்கள் மீண்டும் முன்னெடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதேவேளையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உருவாகியுள்ள இந்த ஒப்பந்தம் மிகவும் வலிமையான அடித்தளத்தை கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.மத்திய கிழக்கு பிராந்தியத்தின் எதிர்கால அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலை தீர்மானிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள கையெழுத்து நிகழ்வை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், பல மாதங்களாக நீடித்த பதற்றம் தணிவடையும் வாய்ப்பு உருவாகும் நிலையில், டிரம்பின் புதிய எச்சரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
New excitement international arena deal Iran is not final US President Trump makes dramatic announcement