"உதயநிதி தாத்தாவின் சொத்துக்கு ஆசைப்படலாம்... அரியணைக்கு அல்ல!" – உதயநிதி மீது செங்கோட்டையன் விமர்சனம்!
Udhayanidhi might covet his grandfather wealth but not the throne Sengottaiyan criticizes Udhayanidhi
காவிரி விவகாரம், பட்ஜெட் கூட்டத்தொடர் எதிர்பார்ப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொடர்பான விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
பனையூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், திமுக தலைவர்கள் தொடர்ந்து பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.
"பெண்களை பற்றி இழிவாக பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு முன்பு பொன்முடியும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சையும் பெண்களோ, பொதுமக்களோ ஏற்கவில்லை. அதனால் அவர் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை சரியானதே," என்றார்.
மேலும், "தமிழக வெற்றிக் கழகம் தெளிவான தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வருகிறது. தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக மாற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் நோக்கம். அதைத்தான் அவர் செயல்படுத்தி வருகிறார். அதனால் எதிர்க்கட்சியினர் பதற்றமடைந்துள்ளனர்," என்று கூறினார்.
உதயநிதியை நேரடியாக விமர்சித்த செங்கோட்டையன், "தாத்தாவின் சொத்துக்கு பேரன் உரிமை கோரலாம். ஆனால் தமிழ்நாட்டின் அரியணைக்கு யார் வர வேண்டும் என்பதை மக்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். பேரன் ஆசைப்படலாம்; ஆனால் அரியணை ஏற முடியாது என்பதைத்தான் தமிழகம் நிரூபித்து வருகிறது," என்றார்.
அதேபோல், "எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தபோது 100 நாட்கள்கூட நீடிக்காது என்றார்கள். ஆனால் அவர் உயிருடன் இருந்த வரை முதலமைச்சராக இருந்தார். அதேபோல் ஜெயலலிதாவும் இறுதி வரை தமிழகத்தை வழிநடத்தினார். அதுபோலவே, எங்கள் தலைவர் விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர். அதை யாராலும் தடுக்க முடியாது," என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாளை தேர்தல் நடந்தாலும் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும். பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அந்த மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாததால்தான் திமுக தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. ஆனால் மக்களே அனைத்தையும் கவனித்து வருகிறார்கள்," என்று கூறினார்.
English Summary
Udhayanidhi might covet his grandfather wealth but not the throne Sengottaiyan criticizes Udhayanidhi