ஒரே வீட்டில் இருந்தபோது தெரியாத பாசம்; பிரிஞ்ச பிறகுதான் தெரிந்தது - தங்கை திவ்யா பற்றி ஜேசன் சஞ்சய் உருக்கம்!
Jason Sanjay speaks movingly about his sister Divya
நடிகர் விஜய்யின் மகனும், 'சிக்மா' படத்தின் இயக்குநருமான ஜேசன் சஞ்சய், தனது தங்கை திவ்யா சாஷாவுடனான பாசப்பிணைப்பு குறித்து பகிர்ந்துள்ள தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
விஜய் சினிமாவில் இருந்து விலகிய பிறகு, அவரது மகன் ஜேசன் சஞ்சய் 'சிக்மா' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் அவர், அண்மையில் அளித்த பேட்டிகளில் குடும்பம், சிறுவயது நினைவுகள் மற்றும் தனது சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில் தனது தங்கை திவ்யா சாஷாவைப் பற்றி பேசிய ஜேசன் சஞ்சய், சிறுவயதில் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டாலும், வீட்டில் எப்போதும் தவறு தன் மீதுதான் சுமத்தப்பட்டதாக நகைச்சுவையாக கூறினார்.
"படிப்புக்காக முதலில் நான் வீட்டை விட்டு வெளிநாடு சென்றேன். சில காலம் கழித்து ஊருக்கு வந்தபோது, திவ்யாவும் தனது மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டார். ஒரே வீட்டில் இருந்தபோது தெரியாத பாசம், தனித்தனியாக வாழத் தொடங்கிய பிறகுதான் புரிந்தது. அதன்பிறகு வீடியோ கால் மூலம் அடிக்கடி பேச ஆரம்பித்தோம். தூரம் அதிகரித்த பிறகுதான் எங்களின் உறவு இன்னும் வலுவானது," என்று அவர் கூறினார்.
மேலும், தனது இயக்குநர் பயணத்தில் திவ்யா முக்கிய பங்கு வகித்ததாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்தார்.
"என் முதல் படமான *'சிக்மா'*வின் கதையை முதலில் கேட்டது திவ்யாதான். எந்தத் தயக்கமும் இல்லாமல் நேர்மையான கருத்துகளைச் சொல்வாள். அதனால்தான் என் புதிய ஐடியாக்களை முதலில் அவளிடமே பகிர்வேன். ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை எளிதில் மாற்ற முடியாது. யாராவது வேறு கருத்து சொன்னாலும், தனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி மற்றவர்களைப் புரிய வைக்கும் குணம் அவளுக்கு இருக்கிறது. நான் இயக்குநராக பணியாற்றத் தொடங்கிய பிறகுதான், அந்த குணத்தின் முக்கியத்துவம் எனக்கு இன்னும் நன்றாக புரிந்தது," என்றார்.
அதே பேட்டியில், தனது சிறுவயது குறும்புகளையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்டார். ஒருமுறை வீட்டில் யாருக்கும் சொல்லாமல் இரவில் நண்பர்களுடன் வெளியே சென்றதாகவும், செல்போன் சார்ஜ் தீர்ந்து அணைந்ததால் குடும்பத்தினர் பதற்றமடைந்து போலீசில் புகார் அளிக்கும் நிலை வரை சென்றதாகவும் கூறினார். மறுநாள் வீட்டுக்கு திரும்பியபோது பெற்றோரிடம் கடுமையான கண்டிப்பை சந்தித்த அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.
English Summary
Jason Sanjay speaks movingly about his sister Divya