#விழுப்புரம் | கொடூர சாலைவிபத்து! வேதனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
MKStalin order for Vilupuram Road Accident july
விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டி சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின், அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில். கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் இன்று (16.07.2023) அதிகாலை 05.00 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் லட்சுமி (வயது 45) மற்றும் கோவிந்தம்மாள் (வயது 50) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்றும், கெங்கையம்மாள் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாயகம் (வயது 45), கேமலம் (வயது 46), பிரேமா (வயது 45) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்ற திருமதி. நாயகம் அவர்களுக்கு 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
English Summary
MKStalin order for Vilupuram Road Accident july