சென்னையில் 126.53 கோடி முறை மகளிர் விடியல் பயணம்!
Makalir Vidiyal Payanam Chennai Update
தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கிய திட்டமாக, மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் அரசு மாநகர பேருந்துகளில் மகளிா் கட்டணமின்றி பயணித்து வருகின்றனா்.
சமூக, பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் மற்றும் உயா்த்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இந்தப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது.
பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மாநகர போக்குவரத்துக்கழகம் உயா்த்தி உள்ளது.
அதன்படி, சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் 3,600-க்கும் மேற்பட்ட பேருந்துகளில், சுமாா் 1500 பேருந்துகள் வரை மகளிா் விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இயக்கப்பட்டு வரும் நிலையில், 174 சிவப்புநிற விரைவு பேருந்துகளையும், மகளிா் விடியல் பேருந்துகளாக மாற்றியது.
இந்நிலையில், சென்னையில் மட்டும் மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ், கடந்த மூன்றரை ஆண்டுகளில் 126.53 கோடி முறை பெண்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். சென்னை மாநகர விடியல் பயண பேருந்துகளில் நாள்தோறும் 12.07 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள்.
சென்னை மாநகர போக்குரத்து கழகம் சார்பில் நாள்தோறும் 1,654 மகளிர் விடியல் பயண பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் நாள்தோறும் 210 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Makalir Vidiyal Payanam Chennai Update