அமைதி பூங்கா என்ற நற்பெயரை நிலைநாட்ட வேண்டும்..காவல்துறைக்கு துணைநிலை ஆளுநர் வேண்டுகோள்!
Maintain the reputation of the Park of Peace Lieutenant Governor appeals to police
புதுச்சேரி அமைதி பூங்கா என்ற நற்பெயரை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் காவல்துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள்விடுத்தார்.
புதுச்சேரி மாநில சட்டம் ஓழுங்கு நிலைமை குறித்த சீராய்வு கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் டாக்டர் சரத் சௌகான், காவல்துறை தலைமை இயக்குனர் ஷாலினி சிங், காவல்துறை தலைமை ஆய்வாளர் அஜித் குமார் சிங்ளா, காவல்துறை சிறப்பு செயலர் கேசவன், சட்டத்துறைச் செயலர் திரு சத்தியமூர்த்தி, துணை தலைமை ஆய்வாளர் சத்திய சுந்தரம், காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். காரைக்கால் மஹே, ஏனாம் பகுதிகளை சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகள் காணொளி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்து வருகிறது. - காவல்துறையின் தகுந்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்றங்களின் விகிதம் குறைந்து இருக்கிறது.
சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், இரவு ரோந்து, தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தீவிரமாக கண்காணித்தல் ஆகியவற்றின் மூலமாக சமூக அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது என்று புள்ளி விவரங்களுடன் காவல்துறை தலைமை இயக்குநர் விளக்கினார்.
கூட்டத்தின் இறுதியில், துணைநிலை ஆளுநர் பின்வரும் அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
• சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் குறைபாடு இல்லாமல் எடுக்க வேண்டும். சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
• இளைஞர்கள் சமூக குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
• உயர் கல்வி நிறுவனங்களில் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பழக்கம் கண்டறியப்பட்டால் அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு சமூக பொறுப்புணர்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்த வேண்டும்.
• வரவிருக்கும் தேர்தலை ஒட்டி தேர்தல் நடைமுறைகள் வர இருக்கும் சூழ்நிலையில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
• புதுச்சேரி அமைதி பூங்கா என்ற நற்பெயரை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
English Summary
Maintain the reputation of the Park of Peace Lieutenant Governor appeals to police