நொடியில் முடிந்த வாழ்க்கை...! பொக்லைன் எந்திரம் மோதி முன்னாள் எம்.எல்.ஏ. மகன் துயர மரணம்...!
Life ended instant Former MLA son tragically dies after being hit by pockline machine
சென்னை கிண்டி அருகே நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில், இளம் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர், மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளானின் மகன் உலகாதிபதி என்பது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான உலகாதிபதி, சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிப் படிப்புக்காக சென்னை வந்த அவர், வேளச்சேரியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்தார்.சம்பவத்தன்று காலை, வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
கிண்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக அவருக்கு முன்னால் சென்ற வாகனங்கள் திடீரென நின்றன. இதனால் உலகாதிபதியும் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.
அப்போது அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த பொக்லைன் எந்திரம் எதிர்பாராத விதமாக உலகாதிபதியின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த உலகாதிபதி மீது, பொக்லைன் எந்திரம் ஏறி இறங்கியது.
இந்த கோர விபத்தில் சிக்கிய அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த உலகாதிபதி, அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளானின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.இளம் வயதிலேயே உலகாதிபதி உயிரிழந்த செய்தி, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அ.தி.மு.க.வைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Life ended instant Former MLA son tragically dies after being hit by pockline machine