48 வயதில் முதல்வர் விஜய்யின் தனிச் செயலாளராக லட்சுமி பிரியா ஐஏஎஸ்!யார் இந்த தமிழ் பெண்?
Lakshmi Priya IAS at the age of 48 becomes Chief Minister Vijay personal secretary! Who is this Tamil woman
தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, அவரது அலுவலகத்திற்கான முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, முதல்வரின் தனிச் செயலாளர்-1 ஆக பி. செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தனிச் செயலாளர்-2 ஆக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் தொடர்பான திட்டங்களை முன்னெடுக்க இவரது நியமனம் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது.
லட்சுமி பிரியா, தமிழ்நாடு கேடரைச் சேர்ந்த 2006ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 1978 டிசம்பர் 10ஆம் தேதி பிறந்த இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.இ மற்றும் எம்.ஏ பட்டங்களை முடித்துள்ளார். 28 வயதில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், தற்போது 48 வயதில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளராக உயர்ந்துள்ளார்.
அரசுப் பணியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் இவருக்கு உள்ளது. மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், திட்ட இயக்குநர், இணைச் செயலாளர், இணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பதவிகளில் பணியாற்றியுள்ளார். நிர்வாக திறன் மற்றும் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்திய அனுபவம் காரணமாகவே அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார். அந்த காலகட்டத்தில் சமூக முன்னேற்றம், தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற “TN Beat Expo 2025” கண்காட்சியில் முக்கிய பங்காற்றினார். அந்த நிகழ்ச்சியில் 1500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். இத்தகைய நிகழ்வுகள் மூலம் சமூக ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளை உருவாக்க அவர் முயன்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் புலமை பெற்ற லட்சுமி பிரியா, சமூகநீதி சார்ந்த நிர்வாக அணுகுமுறைக்காக அறியப்படுகிறார். முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசில் சமூக நலத் திட்டங்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றப் பணிகளில் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது பதவிக்காலம் ஆரம்பத்தில் ஓராண்டுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Lakshmi Priya IAS at the age of 48 becomes Chief Minister Vijay personal secretary! Who is this Tamil woman