குன்றத்தூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அரிவாளால் வெட்டி படுகொலை.. காரணம் என்ன.?
Kundrathur VCK admin murder
குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே தரப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் அதிஷ் (வயது 29). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை இவரது அண்ணன் மகன்களான சுகாஷ் (வயது 25), சுனில் (வயது 22) ஆகிய இருவரும் சித்தப்பாவான அதிஷிடம் தகராறு செய்தனர். இதில் தகராறு முற்றிய நிலையில் அண்ணன் மகன்கள் இருவரும் சித்தப்பா அதிஷை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனை தடுக்க வந்த அதிஷின் அண்ணன்களான முரளி (வயது 33), சுகுமார் (வயது 38) உள்ளிட்ட மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கு கொண்டு செல்லும் வழியிலேயே அதிஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவரது அண்ணன்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் அதிஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த சுகாஷ் மற்றும் சுனில் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Kundrathur VCK admin murder